பகிங்ஹாம் கால்வாயில் மூழ்கிய 3 சகோதரர்கள்
மரக்காணம் : மரக்காணம் – திண்டிவனம் செல்லும் வழியில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக, பகிங்ஹாம் கால்வாய் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த வழியாக வெள்ளம் போல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கழுவெளி ஏரியில் உள்ள தண்ணீர் இந்த வழியாக சென்று கடலில் கலப்பதால், இந்த பகுதியில் அதிக மீன்கள் கிடைக்கின்றன.
பாலத்தின் கீழ் பகுதி ஆழமாக உள்ளதால், ஆபத்தை உணராமல், தினமும் அங்கு மீன் பிடித்து வருகின்றனர். நேற்று மாலை, 5:30 மணிக்கு மரக்காணம் சந்தைதோப்பை சேர்ந்த கணேசன் மகன்கள் லோகேஷ், 26, இரட்டையர்களான விக்ரம், 24, சூர்யா, 24, ஆகிய மூவரும், பாலத்தின் கீழ் பகுதிக்கு சென்று மீன் பிடித்தனர்.
அப்போது, லோகேஷ் கால்வாயில் தவறி விழுந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டார். லோகேஷை காப்பாற்ற முயன்ற விக்ரம், சூர்யாவும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மாயமான மூவரையும் மரக்காணம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர்.