மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணி மாம்பலம் வீட்டில் திடீர் பள்ளம்
சென்னை:’மாம்பலம், லாலா தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், திடீரென பள்ளம் ஏற்பட்டது தொடர்பாக ஆய்வு நடக்கிறது’ என, மெட்ரோ ரயில் திட்டப் பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோடம்பாக்கம் அருகே, மாம்பலம் லாலா தோட்டம், 2வது தெருவில் உள்ள வீடு ஒன்றின் உள்பக்க தரையில், திடீரென பள்ளம் ஏற்பட்டு, ரசாயன கழிவுகள் வெளியேறின. நல்லவேளையாக, அப்போது வீட்டில் யாரும் இல்லை. இதனால், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடப்பதால், இப்பள்ளம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, மெட்ரோ ரயில் திட்டப் பணி அதிகாரிகள் கூறியதாவது:
தி.நகர் பனகல் பார்க் – கோடம்பாக்கம் வரை, 1,254 மீட்டருக்கு, மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகள் நடந்தபோது, மாம்பலம் லாலா தோட்டம், 2வது தெருவில், ஒரு வீட்டில் எதிர்பாராதவிதமாக பள்ளம் விழுந்துள்ளது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் செல்லும் பாதையில் மண் கலவை வெளியேறியதால், இப்பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த வீட்டில் வசிப்போர் அனைவரும், பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளம் விழுந்த இடத்தில் கான்கிரீட் கலவை கொட்டி நிரப்பப்பட்டு உள்ளது. மேலும், சுரங்கம் தோண்டும் இயந்திரமும், அந்த இடத்தை விட்டு கடந்துவிட்டது.
மேலும், சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் செல்லும் பாதையில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும், நில அதிர்வுகள் பற்றியும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். கடினமான பாறை மற்றும் இலகுவான மண் போன்றவற்றால், இவ்வாறு சில நிகழ்வுகள் நடக்கின்றன.
உள்வாங்கிய வீட்டின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் முழுதையும், மெட்ரோ ரயில் நிர்வாகமே மேற்கொள்ளும். வீடு பராமரிக்கும் வரை, வீட்டின் உரிமையாளர் குடியேறும் வீட்டிற்கான வாடகை கட்டணமும் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.