கூவம் கரையில் கஞ்சா புகைப்பு போதையில் சீரழியும் இளசுகள்
அமைந்தகரை:கூவம் கரையோரத்தில் விடிய விடிய கஞ்சா விற்பனையாளர்களும், கஞ்சா புகைப்பவர்களும் முகாமிட்டு வருவதாக, குடியிருப்பு மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அப்பகுதியில் வசிப்போர் கூறியதாவது:
அமைந்தகரை கூவத்திற்கு, திருவீதியம்மன் கோவில் தெரு, மஞ்சக்கொல்லை தெரு ஆகிய தெருக்கள் வழியாக செல்லலாம்.
சேத்துப்பட்டு, டி.பி., சத்திரம், அமைந்தகரை ஆகிய பகுதிகளில் இருந்து இளைஞர்கள் கஞ்சா புகைத்து அட்டூழியம் செய்கின்றனர்.
சமீபத்தில் கூவம் கரையோரத்தில் அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கஞ்சா புகைத்துள்ளனர். அப்போது, போலீஸ் வருவதாக நினைத்து, கூவத்தில் குதித்தனர். அதில் இருவர் தப்பினர்; ஒருவர் இறந்தநிலையில் உடல் கரை ஒதுங்கியது.
இச்சம்பவத்தை போலீசார் வெளியில் தெரியாத வகையில் மறைத்தனர்.
இது போன்ற சம்பவங்களை தடுக்க, கூவம் கரையோரத்தில் மற்ற பகுதிகளில் உள்ளது போல், தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.