பூந்தமல்லி, திருவேற்காடு , மாங்காடு நகராட்சிகளுக்கு தீர்வு : 990.60 கோடி! ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்ட அறிக்கை
பூந்தமல்லி::சென்னை மாநகராட்சியை ஒட்டியள்ள பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு நகராட்சி நகராட்சியில், ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த, 990.90 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் அரசு கிடப்பில் போடாமல், சிறப்புக் கவனம் செலுத்தினால், நீண்ட காலமாக கழிவுநீர் பிரச்னையால் தத்தளிக்கும் மூன்று நகராட்சி மக்களுக்கும் தீர்வு கிடைக்கும்.
சென்னை புறநகரை ஒட்டி அமைந்துள்ள, திருவள்ளூர் மாவட்டத்தில், பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாங்காடு நகராட்சியும் அருகருகே அமைந்துள்ளன. இந்த மூன்று நகராட்சிகளிலும், தலா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நகராட்சிகளில், பாதாள சாக்கடை திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக நீர்நிலைகளில் கலக்கிறது.
இதன் காரணமாக, சுற்றுவட்டாரத்தில் உள்ள பல குளம், குட்டைகள் கழிவுநீர் கலந்து மாசடைந்துள்ளன. மேலும், மழைக்காலத்தில், குளங்களில் இருந்து கழிவு நீர் வெளியேறி, குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, 15 ஆண்டுகளுக்கு மேலாக, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு சேவைகள் லிமிடெட் நிறுவனம் வாயிலாக, பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு நகராட்சிகளில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த, 990.60 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 2025ல் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு நகராட்சிகளில், பல ஆண்டுகளாக நிலவி வரும் கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
இதுகுறித்து, நகராட்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு நகராட்சியில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டப் பணி க்கு மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் பணி துவங்கப்படும்’ என்றார்.
வழக்கம்போல் அரசு கிடப்பில் போடக்கூடாது
பூந்தமல்லி நகராட்சியில், பாதாள சாக்கடை அமைக்க, 2008ல், 66.22 கோடி ரூபாய் மதிப்பில், திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன்பின் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மீண்டும், 2013ல் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில், பூந்தமல்லிக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதுவும் வெற்று அறிவிப்பாகவே இருந்தது.
இந்நிலையில், 2022ல் பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு நகராட்சிகள் மற்றும் அவற்றை ஒட்டி அமைந்துள்ள ஊராட்சிகளை இணைத்து, ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த முறையாவது, வெற்று அறிவிப்பாக இல்லாமல் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
– சமூக ஆர்வலர்கள்.
* திருவேற்காடு நகராட்சி- ரூ.510.63 கோடி.
* பூந்தமல்லி நகராட்சி- ரூ. 263.14 கோடி
.* மாங்காடு நகராட்சி- ரூ. 216.83 கோடி.மொத்தம்- ரூ. 990.60 கோடி
*திருவேற்காடு நகராட்சிவார்டு எண்ணிக்கை – 18.மக்கள் தொகை – 1,50,000.பரப்பளவு – 28.50 ச.கி.மீ.,–
*மாங்காடு நகராட்சிவார்டு எண்ணிக்கை – 27.மக்கள் தொகை – 1,10,000 பரப்பளவு – 8.40 ச.கி.மீ.,–