சிவனின் தோற்றத்தை விளக்கிய சூர்ய நாராயண மூர்த்தி
மார்கழி இசை, நாட்டிய விழாவில், பரத கலைஞர் சூர்யநாராயண மூர்த்தியின் நிகழ்ச்சி, பாரம்பரியமான அலாரிப்பு உருப்படியுடன் துவங்கியது. ரேவதி ராக, ‘மஹாதேவ சிவ சம்போ’ பாடலை வழங்கினார்.
சிவனின் உடுப்பு மற்றும் தோற்றத்தைப் பற்றிய இப்பாடலில், திங்களை சூடியவனே, கங்கையை தலையில் முடிந்தவனே, ஜடாதாரியே பூத கணங்களின் தலைவனே என, சிவனை போற்றும் வகையில் அமைந்திருந்தது.
தொடர்ந்து, ருக்மணி அம்பா முதலில் ஆடப்பட்டு, கலாஷேத்ராவின் புகழ்பெற்ற தோடி ராக ரூபமூஞ்சி வர்ணம் துவங்கியது. திருவாரூர் தியாகராஜரின் வீரத்தையும், வெற்றியையும், புகழையும் போற்றும் வகையில், இது அமைந்திருந்தது.
பிரம்மதேவரும், விஷ்ணுவும், அடிமுடி தேடிய கதையும் நெற்றிக்கண்ணால் பொடி செய்யும் கதையும் அடக்கமான சிறு சஞ்சாரிகளாக கொண்டு அமையப் பெற்றிருந்தது.
பின், துளசிதாசரின் ராகமாளிகா பஜன் துவங்கியது. வாமனன் ரூபமாக 3 அடி மண் கேட்ட நிகழ்வை கண்முன்னே கொண்டு வந்தார் சூர்யநாராயண மூர்த்தி.
பக்தியில் மூழ்கிய ராம பக்தராக அவரின் நாமத்தை பாடி, ஆடி துதித்ததும் அப்பாதத்தை பூஜித்து தன் நினைவில் அகலாமல், பாதத்தை தன் மார்புடன் இருக்கி அணைத்தது, நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கார்திக் பைன்ஆர்ட்ஸ் சார்பில் இவர் நிகழ்த்திய நாட்டியம் வரவேற்பை பெற்றது.
-மா. அன்புக்கரசி