ரூ.3.66 கோடி நிலம் மோசடி ஸ்ரீபெரும்புதுார் மூதாட்டி கைது
ஆவடி, சென்னை அண்ணா நகர், டவர் மெட்ரோ ஜோன் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன், 33. இவர், கடந்த ஆக., 28ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.
அதன் விபரம்:
ஏ.பி.என்., லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கிடங்கு வைத்துள்ளேன். என் தேவைக்காக, திருமுல்லைவாயில், பாலாஜி நகரில் உள்ள 7,200 சதுர அடி நிலம் வாங்க முடிவு செய்து, அந்நிலத்திற்கு பொது அதிகாரம் பெற்றிருந்த சுரேந்தர் என்பவரிடம் 3.66 கோடி ரூபாய் விலை பேசினேன்.
அப்பணத்தை கொடுத்து, அம்பத்துார் சார் – பதிவாளர் அலுவலகத்தில் என் தந்தை அருணாசலம் பெயரில், நவ., 23ல் பத்திரப்பதிவு செய்தேன்
நிலம் விற்றதற்கு சாட்சியாக, சுரேந்தர் நண்பர்களான பாபு, பராக்சூடா ஆகியோர் சாட்சி கையெழுத்திட்டனர். நான் வாங்கிய இடத்தில் சுற்றுச்சுவர் கட்ட துவங்கியபோது, அந்த இடம் வேறொருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த ராணி, 65, என்பவர், போலி ஆவணங்கள் வாயிலாக தன்னை அந்த நிலத்தின் உரிமையாளராக காட்டிக்கொண்டு, சுரேந்தர் மற்றும் பாபு வாயிலாக, ஆள்மாறாட்டம் செய்து என்னிடம் விற்று ஏமாற்றியுள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார், இதுவரை எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த, முக்கிய குற்றவாளி ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த ராணி, என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.