பூந்தமல்லி கிளை சிறையில் கைதிகள் மொத்தமாக மாற்றம்
பூந்தமல்லி, பூந்தமல்லி கரையான்சாவடியில் தனி கிளை சிறை உள்ளது. இங்கு, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, 46 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சிறை துறை அதிகாரிகள், இம்மாதம் 11ம் தேதி சிறை வளாகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில், கைதிகள் அறையில் ஐந்து மொபைல் போன்கள், 20 கிராம் கஞ்சா மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சிறை காவலர்கள் ஒத்துழைப்புடன், கைதிகள், கஞ்சா போதையில் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, பூந்தமல்லி கிளை சிறையின் துணை ஜெயிலர், உதவி ஜெயிலர், தலைமை காவலர் உட்பட, 11 பேர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி, பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஸ்வத்தாமன் உள்ளிட்ட 23 பேர், வேறு வழக்கில் தொடர்புடைய 15 பேர் என, மொத்தம் 38 கைதிகள், கடந்த 14ல் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
எஞ்சியிருந்தோரில் மூன்று கைதிகள் கோவை; கடலுார், புழலுக்கு தலா இருவர், வேலுாருக்கு ஒருவர் என, நேற்று முன்தினம் மாற்றப்பட்டனர்.
அனைத்து கைதிகளும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பூந்தமல்லி கிளை சிறை, கைதிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.