மாநகராட்சி பகுதிகளில் உள்ள மயான பூமிகளை மேம்படுத்துவது தொடர்பாக மேயர் ஆலோசனை

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மயானபூமிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், சென்னையில் உள்ள 203 மயானங்களில் மேம்பாடு செய்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், நடைபாதை அமைத்தல் பசுமை பரப்பை உருவாக்குதல், மின் வசதி, தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள், தேவையான பணியாளர்களை கொண்டு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மயானங்களில் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக மேயர் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.

இதை தொடர்ந்து, மேயர் தலைமையில் சென்னை மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டிற்கான மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகளின் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை, இயந்திரப் பொறியியல் துறை, மழை நீர் வடிகால் துறை, கட்டடத்துறை, பாலங்கள் துறை, பூங்கா மற்றும் விளையாட்டுத் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, திடக்கழிவு மேலாண்மைத் துறை, பேருந்து சாலைகள் துறை, மன்றத் துறை உள்ளிட்ட துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட வேண்டிய அறிவிப்புகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்து மேயர் அறிவிப்புகளின் மீது உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு இப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த கூட்டங்களில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) ஜெயசந்திர பானு ரெட்டி, இணை ஆணையாளர் (கல்வி) விஜயா ராணி, துணை ஆணையர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதிவிராஜ், வட்டார துணை ஆணையர்கள் அமித், பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா, நிலைக்குழு தலைவர் (பொதுசுகாதாரம்) சாந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *