பிராட்வே பஸ் நிலைய கடைகள் 15 நாட்களில் இடம் மாற்றம்
சென்னை, சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை, தினமும் 50,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் பழமையான பேருந்து நிலையத்தை, 823 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகளை, சென்னை மெட்ரோ ரயில், சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன.
பிராட்வே பேருந்து நிலைய புனரமைப்பு பணிகளுக்காக, பேருந்து நிலையத்தை தற்காலிகமாக, ராயபுரம் என்.ஆர்.டி.மேம்பாலம் அருகே, சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள, 168 கடைகள் இரண்டு இடங்களுக்கு மாற்றும் பணிகள், 15 நாட்களில் முடியும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பிராட்வே பேருந்து நிலையத்தில், 168 கடைகள் மற்றும் 45 குடும்பங்களை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகளுக்கு, பூக்கடை காவல் நிலையம் அருகே, 137 கடைகளும், குறளகம் எதிரே மண்ணடியில், 31 கடைகளும் ஒதுக்கப்பட உள்ளது.
இந்த கடைகளுக்கு மாதத்திற்கு, 520 ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு கடையும், 4 அடி அகலம், 6 அடி நீளத்துடன் அமைக்கப்படுகிறது. இந்த கடைகள் அனைத்தும், 15 நாட்களில் இடமாற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.