ரூ.75 லட்சம் கொள்ளை ராஜஸ்தானில் இருவர் கைது
பூக்கடை, சென்னை பூக்கடை, தங்கசாலை தெருவை சேர்ந்தவர் நிகில், 26; இவர், அதே பகுதியில் கைவினை பொருள்கள் மற்றும் பொம்மை கடை நடத்தி வருகிறார். கடந்த, 14ம் தேதி காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது, கடை கல்லா பெட்டியில் வைத்திருந்த, 70 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
பூக்கடை போலீசார் விசாரணையில், ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்த, ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன், 19, தலைமறைவானது தெரியவந்தது.
சந்தேகமடைந்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, லட்சுமணன், கடைக்கு அருகே உள்ள தெருவிளக்கு கம்பம் வழியாக முதல் மாடியில் ஏறி, அங்குள்ள கண்ணாடி ஜன்னலை திறந்து, கடையின் உள்ளே இறங்கி, பணத்தை திருடியதும், பின் அதே வழியில் தப்பியதும் தெரிய வந்தது.
தனிப்படை போலீசார், ராஜஸ்தான் மாநிலம் சென்று, உள்ளூர் போலீசார் உதவியுடன், லட்சுமணன் 19, அவரது நண்பர் ராஜேந்திரா, 24, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 55.85 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கைதான இருவரும் நேற்று முன்தினம், ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, முறையான அனுமதியுடன், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.