கோ – ஆப்டெக்ஸ் 150வது கிளை திறப்பு
சென்னைசென்னை, ஓமந்துாரார் மருத்துவமனை எதிரே, கோ – ஆப்டெக்ஸ் நிறுவனத்தின், 150வது கிளை நேற்று திறக்கப்பட்டது. புதிய கிளையை, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். விழாவில், அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய கிளை திறப்பு குறித்து, கோ – ஆப்டெக்ஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கோ – ஆப்டெக்சில், பொங்கல் பண்டிகையையொட்டி நவீன வகை ஆடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பட்டு, காட்டன் ரக சேலைகள், மென்பட்டு, பருத்தி சேலைகள் மற்றும் துப்பட்டாக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
முதன் முதலாக, நீலகிரி மலைவாழ் மக்களின், தோடா வகை துணிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், குஷன் கவர்கள், பைகள், கோட், சால்வைகள் உள்ளன. இவை முழுதும், கைத்தறியால், சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் உருவாக்கப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டு, பொங்கலுக்கு, 43 கோடி ரூபாய்க்கு துணிகள் விற்கப்பட்டன. வரும் பொங்கல் பண்டிகைக்கு, 50 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கிளையின் முதல் தளத்தில், பட்டு, பருத்தி சேலைகள், ஏற்றுமதி ரகங்கள், வேட்டிகள், துண்டுகள், வீட்டு உபயோக துணி வகைகள் உள்ளன.
இரண்டாவது தளத்தில், கைத்தறி மற்றும், கைவினை பொருட்கள், ரெடிமேட் துணிகள் உள்ளன. மூன்றாவது தளத்தில், கோ – ஆப்டெக்ஸ் அலுவலகம் செயல்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.