வாடகை தாய் பதிவுக்கு மோசடி: 2 பேர் கைது
சென்னை,வாடகை தாய் வாயிலாக குழந்தைகள் பெற்று கொடுக்க விண்ணப்பித்து, ஆள்மாறாட்டம் செய்த, பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில், நேற்று முன்தினம் மாவட்ட வாடகை தாய் மருத்துவ குழு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதில், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்று கொடுக்க விண்ணப்பித்திருந்த, எண்ணுாரைச் சேர்ந்த மகா, 30, கொடுத்த ஆவணங்களை பரிசீலித்த குழுவினர், அவரது கணவர் ரவியிடமும் விசாரணை நடத்தினர்.
இதில், மகா என்பவர் கணவர் ரவியை பிரிந்து, பல ஆண்டுகளாக தனியே வசித்து வரும் நிலையில், விஜயன் என்பவரை அவரது கணவராக காண்பித்து, ஆள்மாறாட்டம் செய்தது விசாரணையில் தெரிந்தது.
மருத்துவ குழு அளித்த புகாரையடுத்து, தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, எண்ணுாரைச் சேர்ந்த மகா, 30, விஜயன், 32, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.