‘ஜெம்’ மருத்துவமனை விளக்கம் ஏரியில் கழிவை கொட்ட வில்லை
சென்னை,பல்லாவரம் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக, செப்., 25ல் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், மணப்பாக்கம் மியாட் மருத்துவமனை, பெருங்குடி ஜெம் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகள், பல்லாவரம் ஏரியில் கொட்டப்பட்டு இருப்பதாக, சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில், தாம்பரம் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் புகார் அளித்தனர்.
இதுகுறித்து, தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், இரு மருத்துவமனைகளையும், இந்த வழக்கில் இணைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்ந்ிலையில், ஜெம் மருத்துவமனை தாக்கல் செய்த அறிக்கை:
பெரும்பாக்கம் ஜெம் மருத்துவமனையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளையும், 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளையும் பின்பற்றி வருகிறோம். விதிகளை பின்பற்றி, திடக்கழிவுகளை சேகரித்து, அதை பாதுகாப்பாக அகற்றும் பொறுப்பை, குப்பை சேகரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளோம்.
மருத்துவமனையில் உருவாகும் உயிரி மருத்துவ கழிவுகளை சிவப்பு, மஞ்சள், நீலம் என, பல்வேறு வகைகளாக பிரித்து, ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்திடம் ஒப்படைக்கிறோம். பல்லாவரம் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதாக வெளியான செய்தி அறிந்து, ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.