வேளச் சேரியில் திருமணமான 7 மாதத்தில் மாமியார் திட்டியதால் கர்ப்பிணி தற்கொலை
வேளச்சேரி: வேளச்சேரி, ஓரண்டி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காமாட்சி (30). இவரது கணவர் கோபி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்தில் இறந்தார். இதையடுத்து, அதே தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் என்பவரை, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மே மாதம் 15ம் தேதி 2வது திருமணம் செய்து கொண்டார். மணிகண்டனுக்கும் ஏற்கனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், காமாட்சியை 2வது திருமணம் செய்துள்ளார்.
நேற்று முன்தினம் மணிகண்டன் வேலைக்கு சென்றார். காமாட்சி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், காமாட்சியின் தாய் மீரா, செல்போனில் தனது மகளை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் பதிலளிக்கவில்லை. இதையடுத்து, மருமகன் மணிகண்டனை தொடர்பு கொண்டு, இதுபற்றி தெரிவித்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்தபோது, கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை.
பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, காமாட்சி தூக்கில் தொங்கியது தெரிந்தது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவர்கள் பரிசோதனையில், காமாட்சி இறந்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார், காமாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மணிகண்டனின் தாய் பொம்மிக்கும், காமாட்சிக்கும் நகை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பொம்மி திட்டியதால் விரக்தியடைந்த காமாட்சி தூக்கிட்டு தற்ெகாலை செய்ததும், காமாட்சி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.