மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்

சென்னை புரசைவாக்கத்தில் உடல் முழுவதும் பெயிண்ட் தடவிய நிலையில் ஒரு நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரது நடவடிக்கை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக அமைந்தது. இதையடுத்து வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு மனிதாபிமான முறையில் அந்த நபரை அழைத்து விசாரித்தார்.

விசாரணையில் அவரது பெயர் கருணாகரன் (வயது 57) என்பதும், கரும்புத்தோட்டம் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை சலூன் கடைக்கு அழைத்து சென்று முகசவரம் செய்து, குளிப்பாட்டி, புதிய உடைகளையும் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு வாங்கி கொடுத்தார். அதோடு கருணாகரன் வலியுறுத்தி கேட்டபடி தொப்பியும், கண்ணாடியும் கூட வாங்கி தந்தார்.

பின்னர் அந்த நபரை ஓட்டலுக்கு அழைத்து சென்று சாப்பிட வைத்தார். அதனைத்தொடர்ந்து அவரது குடியிருப்புக்கு சென்று அவரை ஒப்படைத்தார். மனிதாபிமான முறையில் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு செய்த இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *