கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணியை முடிப்பதில் தாமதம்
சென்னை, ‘மழைநீர் கால்வாய் பணியும் நடப்பதால், கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் பணிகள் மேலும் தாமதமாகும்’ என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும், 80 சதவீத அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
இங்கு செல்ல, புறநகர் மின்சார ரயில் வசதி இல்லாததால் பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, 500 மீட்டர் துாரத்தில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி, கடந்த ஜன., 2ல் துவங்கியது. வண்டலுாரை அடுத்த நிலையமாக இது அமைகிறது. இந்த பணிகளை, கடந்த ஆகஸ்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. திட்டக் காலம் முடிந்து, பல மாதங்கள் ஆகியும், இன்னும் பணிகள் முடியவில்லை.
இதற்கிடையே, இந்த ரயில் நிலையத்தின் கீழ் பகுதியில், மழைநீர் கால்வாய் அமைக்க உள்ளதால், ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் மேலும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வண்டலுார் – கூடுவாஞ்சேரி இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாயில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மூன்று நடைமேடைகள், ரயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் அலுவலகம், வாகன நிறுத்தம், சி.சி.டி.வி., கேமிராக்கள், நடைமேம்பாலம், எஸ்கலேட்டர்கள் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, ஒரு நடைமேடையில் பணி முடியும் நிலை உள்ளது.
இதற்கிடையே, இந்த ரயில் நிலையத்தின் கீழ் பகுதியில், கூடுதலாக ஒரு மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டுமென, தெற்கு ரயில்வேயிடம், தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதற்கான பணிகளும் நடக்க உள்ளன. இதனால், இந்த ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் மேலும் தாமதமாகும். புதிய ரயில் நிலையத்தை, 2025 ஆகஸ்டில் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.