நெல்லை வாலிபர் கடத்தல்? பல லட்சம் கையாடல் விவகாரம் : போலீசில் புகார்
சென்னை: நெல்லை மாவட்டம் திசையன்விளை நல்லம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் செந்தில் (35). இவர் சென்னையில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது கடைக்கு வரும் பொருட்கள் மூலம் பல லட்சம் ரூபாயை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதால் அந்த கடை உரிமையாளருக்கும், இவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இதுகுறித்து செந்தில் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை செய்த கடையில் பிரச்னை ஏற்பட்டதால் செந்தில் தனது சொந்த ஊரான நல்லம்மாள்புரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த செந்திலை மர்ம நபர்கள் காரில் அழைத்துச் சென்று உள்ளனர். அதன்பின்னர் செந்தில் எங்கு சென்றார், என்ன ஆனார் எனபது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த செந்திலின் தாயார் அல்போன்ஸ் திசையன்விளை காவல் நிலையத்தில் தனது மகனை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டுத்தருமாறும் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திசையன்விளை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.