தாம்பரம் மாநகராட்சியில் தீவிர தூய்மை பணி: மேயர் தொடங்கி வைத்தார்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பொது சுகாதாரத் துறை சார்பில் தீவிர தூய்மை பணியின் கீழ் தெருக்கள் மற்றும் சாலைகளை சுத்தம் செய்தல், மழைநீர் வடிகால்களை தூர்வாருதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், தெருவிளக்குகள் சீர்செய்தல், சாலைகளில் உள்ள சிறு, சிறு பழுதுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் தீவிரத் தூய்மை பணியை மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த தூய்மை பணி 1வது மண்டலம், 3வது வார்டு, சண்முகம் தெரு மற்றும் 11வது வார்டு, தங்கையா தெருவிலும், 2வது மண்டலம், 17வது வார்டு, தர்கா சாலை மற்றும் 21வது வார்டு, கம்பர் தெரு பகுதியிலும், 3வது மண்டலம், 22வது வார்டு, அஸ்தினாபுரம் மற்றும் 40வது வார்டு, கௌரிவாக்கம் பகுதியிலும், 4வது மண்டலம், 32வது வார்டு, திருநீர்மலை சாலை மற்றும் 51வது வார்டு, திருவள்ளுவர் நகர், 5வது மண்டலம், 48வது வார்டு, காந்தி பூங்கா மற்றும் 62வது வார்டு, இரும்புலியூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
இந்தத் தீவிர தூய்மை பணி தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒரு மண்டலத்திற்கு தினசரி தலா 2 வார்டுகள் வீதம் 15 நாட்களுக்குள் 70 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ச.ஜெயபிரதீப், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.