3 பேருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு
சென்னை,:கிழக்கு கடற்கரை சாலை கானாத்துார் பகுதியில், ‘காசா கிராண்ட் இ.சி.ஆர்.,- 14’ என்ற பெயரில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் வீடு வாங்க, ராஜரத்தினம், வைகுண்ட நாடார் திவாகரன், புவனா ராம்குமார் ஆகியோர், 2018ல் முன்பதிவு செய்தனர்.
இதில், ராஜரத்தினம், 1.30 கோடி ரூபாய்; வைகுண்ட நாடார் திவாகரன், 1.46 கோடி ரூபாய்; புவனா ராம்குமார், 89.42 லட்ச ரூபாய் செலுத்தினர்.
ஒப்பந்தப்படி, 2019ல் வீட்டை ஒப்படைத்திருக்க வேண்டும். கட்டுமான பணி தாமதத்தால், 2022ல் தான் வீடு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
மேலும், வீட்டில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் திருப்திகரமாக முடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இவர்கள் மூன்று பேரும், ரியல் எஸ்டேட் ஆணையத்தில், தனித்தனியாக புகார் அளித்தனர்.
இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்கள் மூன்று பேரும் தெரிவித்த புகார்கள், விசாரணையில் உறுதியாகின்றன. குறிப்பிட்ட சில காரணங்களால் குறித்த காலத்தில் வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது தெரிகிறது.
எனவே, வீடு ஒப்படைப்பதில் தாமதம் செய்த கட்டுமான நிறுவனம், பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா, 5 லட்ச ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும். மேலும், வழக்கு செலவுக்காக, தலா, 50,000 ரூபாய் அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.