முதன்மை காவலர் பணியிடை நீக்கம் : சிறை கைதிக்கு கஞ்சா சப்ளை
புழல்: புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை மற்றும் மகளிர் சிறைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் உள்ள கைதிகளிடம் கஞ்சா, செல்போன் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது, கஞ்சா, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
புழல் விசாரணை சிறையில் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் திருப்பூர் அடுத்த மேலாத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர், திருவள்ளூர் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் கஞ்சா வழக்கில் கைதாகி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், புழல் சிறையில் உள்ளார். இவரிடம் சிறை முதன்மை காவலர் துரையரசன் 50 கிராம் கஞ்சா கொடுத்து மற்றொரு கைதியான சூளைமேடு பகுதியை சேர்ந்த மெர்வின் விஜய் என்பவரிடம் கொடுத்துவிடு என்று சொல்லி அனுப்பியுள்ளார்.
அப்போது இதனை ரகசியமாக கண்காணித்த மற்றொரு காவலர் கஞ்சாவை பறிமுதல் செய்து, சிறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சிறைத்துறையின் உயர் அதிகாரிகள் துரையரசனை தற்காலிக பணியிட நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். சிறை முதன்மைக் காவலரே கஞ்சா எடுத்து வந்து கைதியிடம் கொடுத்துவிட்டு மற்றொரு கைதியிடம் வழங்கக்கூறிய இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.