குன்றத்துார் சாலையில் கால்வாய்களை துார் வாராததால் வெள்ளம்
பம்மல், பம்மலில் கால்வாய்களை முறையாக துார்வாராததால், பல்லாவரம் – குன்றத்துார் சாலையில், அரை கி.மீ., துாரத்திற்கு வெள்ளம் தேங்கி, வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று பெய்த கனமழையால், பல இடங்களில் வெள்ளம் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர். ஜி.எஸ்.டி., சாலையில், குரோம்பேட்டை, பல்லாவரம்.
தாம்பரம் – வேளச்சேரி சாலையில் சேலையூர், பம்மல் – பொழிச்சலுார் சாலை, தாம்பரம் – முடிச்சூர் சாலைகளில் வெள்ளம் தேங்கியது.
பல்லாவரம் – குன்றத்துார் சாலையில், முத்தமிழ் நகர் முதல் கிருஷ்ணா நகர் வரை, அரை கி.மீ., துாரத்திற்கு 4 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கி, அவ்வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல வாகனங்கள் தண்ணீரில் சிக்கி தத்தளித்தன.
தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும், கால்வாய்களை துார்வார நிதி ஒதுக்கப்பட்டது. 1வது மண்டலத்திற்கு உட்பட்ட பம்மலில், ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு கால்வாய்களை முறையாக துார் வாராததால் வெள்ளம் தேங்கியதாக, அப்பகுதிவாசிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.