டிவி’யில் பேசிய கவுன்சிலர் தி.மு.க. ,வில் ‘சஸ்பெண்ட்’
சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம் விளக்கு பகுதி, சென்னை மாநகராட்சி 113வது வார்டு கவுன்சிலர் பிரேமா சுரேஷ்.
இவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால், தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என, அக்கட்சி பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, கவுன்சிலர் பிரேமா சுரேஷ், பா.ஜ., ஆதரவு தொலைக்காட்சியில், மழை பாதிப்புகள் தொடர்பாக, சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்ததாக வந்த புகாரின் அடிப்படையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கட்சியினர் தெரிவித்தனர்.
சமீபத்திய மழையின்போது, பிரேமா சுரேஷ் அளித்த பேட்டி:
சென்னையில் எதிர்பாராத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. அகத்தீஸ்வரர் கோவில் குளம் நிரம்பி வழிவதால், வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த சாலையில் வடிகால் மிகவும் பழையது என்பதால், மழைநீரை வெளியேற்ற முடியவில்லை. குளத்திலிருந்து ஊற்று எடுத்து, தண்ணீர் வருவது தான் சாலையில் தேங்க காரணம்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.