விளையாட்டு போட்டியில் மாணவியின் தாய் பலி
ஆவடி, பூந்தமல்லி, ராமச்சந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் மேத்தா, 37 – – ரேகா, 34 தம்பதியர். இவர்களுக்கு, மனோசிகா, 11 ; ஹரன்யா, 5 என, இரு மகள்கள் உள்ளனர். இதில், மனோசிகா, மாங்காட்டில் உள்ள தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
அந்த பள்ளி விளையாட்டு போட்டிகள், ஆவடியில் உள்ள, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2ம் அணி மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், பெற்றோருடன், மனோசிகா பங்கேற்றார்.
பெற்றோருக்கான விளையாட்டு போட்டியில், மனோசிகாவின் தாய் ரேகா விளையாடிஉள்ளார். விளையாடி முடித்தபின், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ரேகா மயங்கி விழுந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த மேத்தா, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
ரேகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து, திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.