ஆவடி தத்தளிப்பு : 1,500 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
ஆவடி, ஆவடியில், நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 1,500 வீடுகளை சுற்றி, தெரு முழுதும், மழைநீருடன் கழிவுநீர் தேங்கியது.குறிப்பாக 41வது வார்டில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், அத்தியாவசிய தேவைக்குக்கூட வெளியேற முடியாமல், அப்பகுதிவாசிகள் வீடுகளில் முடங்கினர்.
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நுாலகம் செல்லும் சாலையில், நடந்து சென்ற ஒருவர், திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் தடுமாறி விழுந்து காயமடைந்தார்.
ஆவடி கோவில் பதாகை பிரதான சாலை, ஆவடி பழைய மார்க்கெட் சாலை, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலை, வாட்டர் டேங்க் சாலை மற்றும் 6வது பிளாக்கில் கால் முட்டிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னை – திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, திருநின்றவூர் முதல் திருமுல்லைவாயில் வரை, பல இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம், 5 மற்றும் 6வது பிரதான சாலையில் வெள்ளம் தேங்கி நின்றது. ஆவடி திருமலைராஜபுரம், அண்ணனுார், ஜோதி நகர், மூன்று நகர், திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர், ஆவடி காமராஜர் நகர், கன்னிகாபுரம், முழங்காலுக்கு மேல் வெள்ளம் தேங்கி, பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ஆவடி பேருந்து நிலையம், காவல் நிலையத்தில் தேங்கிய வெள்ளம், டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் வாயிலாக வெளியேற்றப்பட்டது.
திருநின்றவூர் பெரியார் நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் மற்றும் அன்னை இந்திராநகர் உள்ளிட்ட பகுதியில், குடியிருப்பைச் சுற்றி வெள்ளம் தேங்கி நின்று, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.