போக்குவரத்து பாதிப்பு : உயரழுத்த மின்கம்பி மணலி நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்தது
திருவொற்றியூர்: வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து உயர்மின் கோபுரம் வழியாக 400 கி.வா. உயர் அழுத்த மின் கம்பி மணலி, மாதவரம் போன்ற பகுதிகளுக்குச் செல்கிறது. இந்தநிலையில் நேற்று காலை மணலி நெடுஞ்சாலை பகுதியில் காற்றுடன் கனமழை பெய்தபோது, சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே இந்த மின் கோபுரத்தில் இருந்து மின்கம்பி அறுந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்து அங்கேயே வாகனத்தை நிறுத்தினர்.
தகவலறிந்த சாத்தங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு கருதி அந்த வழியாக வாகன போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தினர். இதையடுத்து டவர்லைன் பராமரிப்பு மின் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி 5 தொழில்நுட்ப மின்ஊழியர்கள் விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்து, அறுந்து விழுந்த மின்கம்பியை மீண்டும் கோபுரத்தில் பொருத்தினர். பின்னர் வாகன போக்குவரத்து சீரானது.