மணலி மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் ஆவேசம் : சி.பி. சி.எல்., நிறுவனம் மீது குற்றச்சாட்டு
மணலி, மணலி மண்டல குழு கூட்டம், நேற்று முன்தினம் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில், மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தேவேந்திரன் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், 21வது வார்டு – பாடசாலை தெருவில், 10 கோடி ரூபாய் செலவில், புதிய மண்டல அலுவலக கட்டடம், 34 கோடி ரூபாய் செலவில், 20 குளங்கள் புனரமைப்பு உட்பட, 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் வார்டு பிரச்னைகள் குறித்து பேசினர்.
காசிநாதன், 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்
இதுவரை, 29 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும், 31 துறைகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதில், மின் வாரியம் தவிர வேறு யாரும் பங்கேற்பதில்லை. சரிவர பணி செய்யாத உதவி பொறியாளர் மீது நடவடிக்கை வேண்டும். மஞ்சம்பாக்கம் மருத்துவமனையில், மருத்துவர்கள் கிடையாது.
ராஜேந்திரன், 16 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்
மணலிபுதுநகர் – ஜோதி நகர் இணைப்பு சாலை; குளங்களுக்கு படித்துறை அமைக்க வேண்டும். காலி மைதானங்களில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் வளரும் கூடமாக உள்ளது. நில உரிமையாளர் மீது, நடவடிக்கை, அபராதம் விதிக்க வேண்டும்.
ஸ்ரீதரன், 18வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்
ஆமுல்லை வாயல், வைக்காடு கிராமங்களில் பல ஏக்கர் நிலங்களை நிறுவனத்திற்கு வழங்கி விட்டு, அரை கிரவுண்ட் நிலம் வாங்கிய மக்களுக்கு, சி.பி.சி.எல்., நிறுவனம் எந்த உதவியும் செய்யவில்லை.
வெள்ள காலங்களில் பிஸ்கட் பாக்கெட் கூட கொடுப்பதில்லை. இந்நிலையில், சி.பி.சி.எல்., நகர் என பெயர் வைத்துள்ளனர். இதன் காரணமாக, இந்த பகுதிகளை அந்நிறுவனமே தத்து எடுத்து, எல்லா உதவிகளையும் செய்வது போல் மாயை தோற்றம் உள்ளது. அப்படி கிடையாது. எனவே, நகரின் பெயர் மாற்ற வேண்டும்.
ராஜேஷ் சேகர், 21வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்
அம்பேத்கர் நகரில், காலை 6:00 – 9:00 மணி வரை, தினம், மூன்று மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. காரணம் கேட்க, மின்வாரிய அதிகாரிகளை போனில் அழைத்தால், எடுப்பதே இல்லை.
நந்தினி, 15வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்
பழைய நாப்பளையம் துவக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மாடுகள் மேய்கின்றன. மணலிபுதுநகர் ஆரம்ப சுகாதார மையத்தில், ஊழியர் பற்றாக்குறை உள்ளது.
ஏ.வி.ஆறுமுகம், மணலி தி.மு.க., மண்டல குழு தலைவர்
விருப்பமுள்ள மலேரியா ஊழியர்கள் ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாட்களிலும், சம்பளத்துடன் பணியாற்றலாம் என, மேயர், கமிஷனர் உள்ளிட்டோர் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களும், பணியாற்ற தயாராக உள்ளனர்.
இந்நிலையில், சுகாதார துறை அதிகாரிகள், கடந்த ஞாயிறு கட்டாய விடுப்பு அளித்துள்ளனர். இனி, விருப்பமுள்ள ஊழியர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். காலி மனைகளில் தேங்கும் மழைநீரால் பாதிப்பிருந்தால், சுகாதார துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.