2 அரசு அலுவலர்கள் ‘சஸ்பெண்ட்’ இருளர் வீடுகள் சேதம் விவகாரம்
காஞ்சிபுரம், பொருளாதாரத்தில் பின்தங்கிய இருளர் மக்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என, சட்டசபையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 443 இருளர்களுக்கு பட்டா வழங்கி, தலா 4.60 லட்சம் செலவில், புதிய கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின் கடந்தாண்டு டிசம்பர் இறுதியில், காணொளி காட்சி வாயிலாக புதிய வீடுகளை திறந்து வைத்தார். ஓராண்டு நிறைவு பெறுவதற்குள், ஊத்துக்காடு, மலையாங்குளம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட இருளர் வீடுகளின் கூரையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. தரை தளம் பெயர்ந்து, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் 10ம் தேதி, படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, உத்திரமேரூர் வட்டாரத்தில் பணிபுரியும் பணி மேற்பார்வையாளர் பாஸ்கரன், பெண் உதவி பொறியாளர் ஒருவர் என இருவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
இருளர் வீடு கட்டுமான பணிகளை முறையாக கண்காணிக்க தவறியதா, ஊரக வளர்ச்சித் துறையால் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
அரசு சார்பில் கட்டப்படும் இலவச தொகுப்பு வீடு கட்டுமானப் பணிகளை முறையாக கண்காணிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.