விபத்து தொடர்வதால் லாரி டிரைவர்கள் பீதி : மூன்றாம் முறையாக கவிழ்ந்த கன்டெய்னர்

துறைமுகம், சென்னை துறைமுகத்தில், சி.ஐ.டி.பி.எல்., என்ற தனியார் நிறுவனம் பராமரிக்கும் சரக்கு பெட்டக முனையம் உள்ளது.

இந்த துறைமுகத்தை சார்ந்து, சென்னையையொட்டி, 40க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொதுத்துறை சரக்கு பெட்டக நிலையங்கள் உள்ளன. இந்த முனையம் வாயிலாகஆண்டுக்கு, 13 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்படுகின்றனர்.

இந்த முனையத்தில் நேற்று காலை, கிரேன் வாயிலாக அதிக எடையுள்ள சரக்கு பெட்டகத்தை துாக்க முயன்றபோது, சரக்கு பெட்டகம், கன்டெய்னர் லாரி மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதற்கு, போதிய அனுபவமின்றி பயிற்சி கிரேன் ஆப்பரேட்டர்களை நியமிப்பதே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, அனைத்து துறைமுக டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலர் சுரேஷ்பாபு கூறியதாவது:

சி.ஐ.டி.பி.எல்., தனியார் சரக்கு பெட்டக முனையத்தில், சரக்கு பெட்டகங்களை கிரேன் வாயிலாக கையாளும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கடந்த ஜூலை 13ல், சென்னை காட்டுபள்ளி துறைமுகத்தில், கன்டெய்னர் பெட்டி விழுந்ததில், கீழே வாகனத்தில் இருந்த ஓட்டுநர் ஒருவர் உடல் நசுங்கி பலியானார்.

செப்., 24ம் தேதி, சி.ஐ.டி.பி.எல்., சரக்கு பெட்டக முனையத்தில், சரக்கு பெட்டக எடை தாங்காமல், கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இங்கு, செப்., 26ல், அதிக எடை காரணமாக கிரேனால் துாக்க முடியாத நிலை ஏற்பட்டதால், சரக்கு பெட்டகம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக, அந்தரத்தில் தொங்கியது.

தற்போது, எஸ்.ஆர்.லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கன்டெய்னர் லாரி மீது, கன்டெய்னர் பெட்டி விழுந்து முழுவதும் சேதமடைந்தது.

புதிய கிரேன் ஆப்பரேட்டர்கள், அனுபவமின்றி நேரடியாக பெரிய சரக்கு பெட்டகங்களை கையாள்வதால், தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், லாரி ஓட்டுநர்கள் உயிர் பயத்தில் வேலை செய்ய வேண்டி உள்ளது.

இதுபோன்ற பயிற்சி ஆப்பரேட்டர்களால், இன்னும் எத்தனை விபத்துகள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. துறைமுக நிர்வாகம், தொடர் விபத்துகளை தவிர்க்க, அனுபவமிக்க கிரேன் ஆப்பரேட்டர்களை பணியமர்த்த வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *