கிளாம்பாக்கத்தில் அரசு விரைவு பஸ் ஓட்டுநர்கள் போராட்டம்

கூடுவாஞ்சேரி: சென்னை, புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தோர் சொந்த ஊர்களுக்கு செல்ல, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வருகின்றனர்.

பயணியர் வசதிக்காக, வாசலில் இருந்து வெளியூர் பேருந்துகளின் நடைமேடைக்கு செல்ல ‘பேட்டரி’ வாகனம், சிற்றுந்து இயக்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு வரும் பயணியரை வழிமறித்து, ஆம்னி பேருந்தில் ஊழியர்கள் ஏற்றுவதாக கூறி, அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள், கிளாம்பாக்கம் பேருந்து முனைய வளாகத்தில் தரையில் அமர்ந்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கிளாம்பாக்கம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

அவர்கள் கூறியதாவது:

பேட்டரி வாகனத்தில் அழைத்து வரும் பயணியரை, கிளாம்பாக்கத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடத்தில் இறக்கிவிடுகின்றனர்.

பயணியரை, அங்கிருந்து அரசு பேருந்து நடைமேடைக்கு நடந்து வரவிடாமல், ஆம்னி பேருந்து ஊழியர்கள், அவர்களது வாகனத்தில் ஏற்றிக் கொள்கின்றனர்.

இதனால், அரசு பேருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மேலும், மாநகர பேருந்தில் இறங்கி, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு செல்லும்ஒன்றாம் எண் நடைமேடையை பராமரிப்பு பணி எனக்கூறி மூடியுள்ளனர்.

இதனால், மாற்றுவழியில் செல்லும் பயணியரும், ஆம்னி பேருந்தில் பயணம் செய்ய வேண்டியசூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *