குன்றத்துாரில் வண்ணைக்கு ‘மாத்திரை’ சப்ளை நால்வர் கைது

வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு பகுதிகளில், போதை மாத்திரைகள் அதிகளவில் பயன்படுத்துவதாக, வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப்படை உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையிலான போலீசார், வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரைகள் உபயோகித்தோரை பிடித்து, தீவிரமாக விசாரித்தனர்.

இதில் அவர்கள், குன்றத்துாரில் இருந்து போதை மாத்திரைகள் வாங்கி வந்து பயன்படுத்துவதாக தெரிவித்தனர். இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீசார், குன்றத்துார் பகுதியை கண்காணித்து வந்தனர்.

குன்றத்துார், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காய்கறி வியாபாரி வெங்கடேஷ், 24, சூரியபிரகாஷ், 23, கெருகம்பாக்கம், ஆகாஷ் நகரைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஆகாஷ்ராஜா, 21, மற்றும் அமீர், 19, ஆகியோர், போதை மாத்திரைகளை தொடர்ந்து விற்று வந்தது தெரியவந்தது.

நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 37 பெட்டிகளில் 3,700 ‘டைடால்’ போதை மாத்திரைகள், 10 மொபைல் போன்கள், மூன்று கத்திகள், இருசக்கர வாகனம் மற்றும் 22,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மும்பையில் ஒரு நிறுவனத்தில் இருந்து ‘கூரியர்’ வாயிலாக போதை மாத்திரைகளை, நால்வரும் பெற்றுள்ளனர். ஒரு மாத்திரையை மூன்று ரூபாய்க்கு வாங்கி, 300 ரூபாய் வரை விலைக்கு, சென்னையின் பல இடங்களுக்கு விற்றுள்ளனர்.

நால்வரிடமும், போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மதுரவாயல் போலீசார், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வானகரத்தைச் சேர்ந்த சோமசங்கர், 37, என்பவரை பிடித்தனர்.

அவரிடம் 2 கிராம் மெத் ஆம் பெட்டமைன், அதை பயன்படுத்த நான்கு மருத்துவ ஊசிகள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த போலீசார், சோமசங்கரை கைது செய்தனர்.

அதேபோல் ராமாபுரம் போலீசார், மெத் ஆம் பெட்டமைன் வைத்திருந்த விக்னேஷ், 27, என்பவரை கைது செய்து, 1.7 கிராம் போதைப் பொருள், ராயல் என்பீல்டு பைக், 2 மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *