மாநகராட்சி சார்பில் 50 பேர் குழு வீடு வீடாக நேரில் சென்று ஆய்வு: பல்லாவரத்தில் 2 பேர் பலி; 25 பேருக்கு உடல் நலக்குறைவு குடிநீர் தரம் பரிசோதனை, சிறப்பு மருத்துவ முகாம்
தாம்பரம்: பல்லாவரத்தில் 2 பேர் உயிரிழப்பு மற்றும் 25 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் 50 பேர் குழு அமைக்கப்ட்டு, வீடு வீடாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். பல்லாவரம், காமராஜர் நகர், கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பொதுமக்கள் வயிற்றுப்போக்கு காரணமாக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் கூடுதலாக 6 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மொத்தமாக தற்போது 25 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதியான பல்லாவரம், காமராஜர் நகர் பகுதியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் நேரில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீரின் தரத்தை அதிகாரிகளுடன் பரிசோதனை செய்தார். மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் தடுப்பு மாத்திரைகள், ஓஆர்எஸ் ஆகியவற்றை வழங்கினார்.
இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி நகர் நல அலுவலர் பொற்செல்வன் கூறியதாவது: வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மொத்தம் 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளிகளாக வருபவர்களையும் உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக இதுவரை 4 பேர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு பகுதிகளில் மருத்துவ முகாம்கள் தாம்பரம் மாநகராட்சி சார்பில் போடப்பட்டுள்ளது.காமராஜர் நகரில் 4 மருத்துவ முகாம்கள் போடப்பட்டுள்ளது. மலைமேடு பகுதியில் தாம்பரம் மாநகராட்சி, மருத்துவத்துறை, பொது சுகாதாரத்துறை சார்பில் 2 மருத்துவ முகாம்கள் போடப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் லாரிகள் மூலம் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
காலை மற்றும் மாலை என ஒவ்வொரு வீடுகளாக சென்று நோய் தடுப்பு மருந்துகள் வழங்குவதற்கு 50 பேர் கொண்ட குழு ஒன்று அமைத்துள்ளோம். நோய் தடுப்பு மாத்திரைகள், ஓஆர்எஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவராக பரிசோதனை செய்யப்பட்டு யாருக்காவது ஏதாவது அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ முகாமுக்கு அழைத்து வரப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அல்லது ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்வோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமாகவே உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
* குடிநீரை பருகி பார்த்து ஆணையர் சோதனை
தாம்பரம் மாநகராட்சி, 13வது வார்டு பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீரை மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் நேரில் சென்று ஆய்வு செய்து குடிநீரை குடித்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும் தாம்பரம் மாநகராட்சி பகுதி முழுவதும் மக்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தமான குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும், மழைக்காலங்களில் குடிநீரில் நிறம் மாற்றம் ஏற்பட்டு ஏதாவது கலந்து வந்தால் உடனடியாக தாம்பரம் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதோடு குடிநீரை காய்ச்சி பருக வேண்டும், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டார்.
தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், 13வது வார்டு பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய்களை கழட்டி தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். குறிப்பாக காமராஜர் நகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்த கண்ணபிரான் தெரு பகுதியில் உள்ள 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முழுவதுமாக தூய்மைப்படுத்தி, குளோரின் போடப்பட்டுள்ளது. மேலும் நீர்த்தேக்க தொட்டியின் பகிர்மான குழாய் முழுவதும் கழட்டப்பட்டு அந்த குழாய்களிலும் குளோரின் போடப்பட்டுள்ளது