சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை: வெளிநாடுகளில் வேலை என சட்டவிரோத ஆள்சேர்ப்பு முகவர்களை நம்ப வேண்டாம்

சென்னை: வெளிநாடுகளில் வேலை என சட்டவிரோதமாக டேட்டா என்ட்ரி மற்றும் கால் சென்டர்களில் வேலை என ஆட்சேர்ப்பு முகவர்களை நம்ப வேண்டாம் என்று பொதுமக்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு மாநில சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மாநில சைபர் க்ரைம் போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களை குறிவைத்து இணையம் மூலமாக விளம்பரம் செய்து பலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டேட்டா என்ட்ரி மற்றும் கால் சென்டர்கள் போன்ற வேலைகளுக்கு அங்கீகரிக்கப்பட்டாத ஏஜென்சிகளால் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. அந்த நாட்டு சைபர் மோசடி பேர்வழிகள் இந்தியாவில் சைபர் குற்றங்களை நடத்த பயன்படுத்துகிறார்கள். எனவே பொதுமக்கள் அரசால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு வேலைக்கான ஏஜென்சிகளை நம்ப வேண்டாம். எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து தப்பிக்க சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

* சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்பவர்களை தவிர்க்கவும், முறையான ஆவணங்கள் இல்லாமல் அல்லது ஏதேனும் சமூக ஊடகத்தின் விளம்பரங்களின் மூலம் வேலைகளை உறுதியளிக்கும் ஏஜென்சிகளை ஒருபோதும் நம்பாதீர்கள்.

* வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நிறுவனங்களை மட்டும் அணுகவும்.

* வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆட்சேர்ப்பு முகவர்களின் பட்டியல் உள்ளது. இதன் மூலம் ஆட்சேர்ப்பு முகமைகளை சரிபார்க்க வேண்டும்.

* குடியேற்ற சட்டம் 1983ன்படி வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் இல்லாமல் ஆட்சேர்ப்பு முகவராக செயல்பட எந்த நபருக்கும் அதிகாரம் இல்லை.

* ஆட்சேர்ப்பு முகவர்களிடம் தங்கள் பதிவுச்சான்றிதழை உங்களிடம் காண்பிக்கும்படி கேளுங்கள். அந்த சான்றிதழில் இருக்கும் உரிம எண்ணை சரிபார்க்க வேண்டும்.

* சந்தேகத்திற்கிடமான ஆட்சேர்ப்பு செய்பவர்களை அடையாளம் கண்டால் உடனடி நடவடிக்கைக்காக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *