பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி எண்ணூர் தாமரை குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: எதிர்ப்பு கிளம்பியதால் பாதியில் நிறுத்தம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 1வது வார்டு, சத்தியவாணி முத்து நகர் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான தாமரை குளம் உள்ளது. சுமார் 5.32 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்திற்கு மழைக்காலத்தில் சுற்று வட்டாரத்திலிருந்து மழைநீர் வருவதால் மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் பயன்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த குளத்தில் தனியார் சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியிருப்பதால் குளத்தின் பரப்பளவு சுருங்கி மழைநீரை சேமிக்க முடியாமல், தண்ணீர் வெளியேறுவதால் அருகில் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஒருவர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், தாமரை குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, நடவடிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி வரும் 9ம் தேதி இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்த அறிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. அதன்படி 54 வீடுகள் குளத்தை ஆக்கிரமித்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு அவற்றை அகற்ற சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் அவகாசம் கேட்கவே ஒருசில வீடுகளை மட்டும் இடித்துவிட்டு மற்றவர்களுக்கு தாங்களாகவே இடித்துக்கொள்ள அவகாசம் அளித்தனர். ஆனால் 10 மாதங்கள் முடிந்தபின்பும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் 2ம் கட்டமாக மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் புருஷோத்தமன் தலைமையில் செயற்பொறியாளர் பாபு, தாசில்தார் சகாயராணி மற்றும் 75 மாநகராட்சி ஊழியர்கள், 2 பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டுவந்து ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகளை அகற்றும் பணியை தொடங்கினர்.

இதில் 6 வீடுகள் வரை இடித்து அகற்றப்பட்டன. அப்போது அங்கு இருந்த ஆக்கிரமிப்பாளர்கள்த ங்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரித்தனர். ஆனால் அதற்கு பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை நாங்கள் கைவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் இடிக்ககூடாது என ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்களிடம் அதிகாரிகள் மாலை வரை பேச்சுவார்த்தை நடத்தியும் ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை. இதனால் பணியை பாதியில், நிறுத்திவிட்டு மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் திரும்பிச் சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *