வியக்க வைக்கும் தொழில்நுட்பம்; 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோயிலை 8 அடி உயர்த்தும் பணி மும்முரம்: அறநிலையத்துறை அசத்தல்
பெரம்பூர்: காலங்காலமாக கட்டிட கலைக்கு தமிழர்கள் தலைசிறந்தவர்கள் என்பதை வரலாறுகள் நமக்கு உணர்த்தி வருகின்றன. பல்லவர், சோழர் கால பல்வேறு கட்டிடங்கள் இன்றைக்கும் பெயர் சொல்லும் அளவிற்கு உள்ளன.
அந்த கால கட்டத்தில் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் தற்போது பொலிவிழந்து, வலுவிழந்து உள்ளன. புராதான சின்னங்கள் மற்றும் கோயில்கள் மட்டும் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான கோயில்கள் மற்றும் புராதான சின்னங்களுக்கு அருகில் இருக்கும் சாலை மற்றும் இதர கட்டிடங்கள் உயர்த்தி அமைக்கப்படுவதால், குறிப்பிட்ட கோயில்கள் மற்றும் புரதான சின்னங்கள் உள்ள இடம் தாழ்வாக மாறி, மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடங்கள் மற்றும் கோயில்களை உயர்த்தும் முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன.
குறிப்பிட்ட ஜாக்கி லிப்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடங்கள் மற்றும் கோயில்களின் உயரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. 3 அடி, 4 அடி என கட்டிட தன்மைக்கு ஏற்றவாறு அதனை உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வியாசர்பாடியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அறநிலையத்துறைக்குச் சொந்தமான ரவீஸ்வரர் கோயில் தரைத் தளத்திலிருந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் சூரிய பகவான் வந்து வணங்கியதால் மூலவருக்கு ரவீஸ்வரர் என பெயர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் சூரிய கதிர் ராஜகோபுரம் வழியாக நந்தி மற்றும் நேரடியாக மூலவர் சிவலிங்கத்தின் மீது விழும். தற்போது சில ஆண்டுகளாக அந்த நிகழ்வு நடைபெறவில்லை. கோயில் தரைதளத்தில் இருந்து சுமார் 5 அடிக்கு பள்ளத்தில் இருப்பதால் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழவில்லை என்பது தெரிய வந்தது.
மேலும் ரவீஸ்வரர் கோயில் உள்ள பகுதி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதாலும், பெருமழையின் போது கோயிலுக்குள் முழுவதும் தண்ணீர் இறங்கி விடுவதாலும் கோயிலை கீழ் மட்டத்திலிருந்து உயர்த்த வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்தினர் முயற்சி செய்து வந்தனர். ஆனால் பல ஆண்டுகளாக இந்த பணிகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன. இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மூலவர், அம்மன் மகா மண்டபம், நந்தி கொடிமரம், சண்டிகேஸ்வரர் ராஜகோபுரம் உள்ளிட்டவற்றை சுமார் 8.6 அடி உயரம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி இதற்காக சுமார் ரூ.2 கோடி செலவில் நவீன தொழில் நுட்பமான ஜாக்கி உதவியுடன் கோயிலை உயர்த்தும் பணியை கடந்த ஜூலை மாதம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இந்த பணிகளை ராஜஸ்தானைச் சேர்ந்த மம்சந்த் ஹவுஸ் லிப்டிங் நிறுவனம் மற்றும் பூவலிங்கம் பேரருள் சிற்பக் கலைக்கூடம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வான ஜாக்கியை வைத்து கோயிலை உயர்த்தும் பணிகள் நேற்று நடைபெற்றன. இந்த கோயில் சுமார் 4 கிரவுண்ட் பரப்பளவில் உள்ளது. இதில் 2,500 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தை மட்டும் ஜாக்கி உதவியுடன் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அப்பணியில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த தலைமை எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினியர் கூறுகையில், கடந்த 1990ம் ஆண்டு அரியானாவில் முதல்முதலில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கட்டிடத்தில் உள்ள ஒரு சிறிய சமயலறையின் உயரம் மட்டும் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக பல கட்டிடங்களின் உயரத்தை இதே முறையில் நாங்கள் உயர்த்தினோம். 2002ம் ஆண்டு முதல்முறையாக 150 ஆண்டு பழமை வாய்ந்த பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குரு புவாரா என்ற ஆன்மிக தலத்தை கீழ்மட்டத்திலிருந்து உயர்த்திக் கொடுத்தோம். அதன் பிறகு பல கோயில்களில் இருந்து எங்களுக்கு அழைப்புகள் வந்தன. தொடர்ந்து அதன் பிறகு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களை கீழ்த் தரத்திலிருந்து 2 அடி, 3 அடி, 5 அடி வரை உயரம் உயர்த்தி கொடுத்துள்ளோம்.
கிண்டியில் உள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோயில், ஆலந்தூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவசுப்பிரமணிய கோயில், செஞ்சி மணப்பாக்கம் பகுதியில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில், ராஜஸ்தான் கங்கா நகர் பகுதியில் உள்ள அனுமன் கோயில் போன்ற பல கோயில்களை நாங்கள் வெற்றிகரமாக ஜாக்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயர்த்தி கொடுத்துள்ளோம். தற்போது வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயில் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 25 தொழிலாளர்களை வைத்து 2 இன்ஜினியர்கள் மற்றும் 2 தலைமை இன்ஜினியர்கள் உட்பட பலர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம். வரும் மார்ச் மாதத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பல கோயில்கள் உயர்த்தப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது,’’ என்றார்.
* பயன்படுத்தும் முறை
ஜாக்கி முறையை பயன்படுத்தி கோயில்கள் மற்றும் கட்டிடங்கள் உயர்த்தப்படுகின்றன. முதலில் எந்த இடத்தை உயரம் தூக்க வேண்டுமோ அந்த இடத்தைச் சுற்றி ஐந்து அடிக்கு பள்ளம் தோண்டப்படுகிறது. அதன் பின்பு அந்தப் பகுதியில் இருந்து மணல் எடுக்கப்பட்டு கான்கிரீட் செய்யப்படுகிறது. அதன் பின்பு அந்த கான்கிரீட் பலப்படுத்தப்படுகிறது. அடித்தளம் வலிமைப்படுத்தப்பட்ட பிறகு ஜாக்கியை வைத்து உயர்த்தப்படுகிறது. ஜாக்கி வைத்த பிறகு அடுத்த மூன்று நாட்கள் அப்படியே அது நிறுத்தப்படுகிறது.
அதன் பின்பு குறிப்பிட்ட அந்தப் பகுதியில் கல் வைக்கப்படுகிறது. இந்த கற்கள் பண்டையகால முறைப்படி சுண்ணாம்பு கருங்கல் பவுடர், கருப்பட்டி ஆற்று மணல் உள்ளிட்டவற்றை கிரைண்டரில் அரைத்து செய்யப்படுகிறது. பண்டைய காலத்தில் இந்த கற்களால் ஆன கட்டிடங்கள் மிக வலிமையாக இருந்தன. அதனால் அதே முறைப்படி இந்த கற்களை வைத்து தாழ்வாக உள்ள பகுதிகளை உயர்த்துகின்றனர். இதனால் வலிமை நன்றாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
* 20 வருட உத்தரவாதம்
தாழ்வான கட்டிடங்கள் மற்றும் கோயில்களை ஜாக்கி மூலம் உயரத்தை அதிகரிக்கும் குழுவினர் எந்த இடத்தில் குறிப்பிட்ட ஜாக்கி முறையை பயன்படுத்தி கட்டிடங்களை உயர்த்துகின்றனரோ அந்த இடத்திற்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு உத்திரவாதம் அளிக்கின்றனர். அதற்குள் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பு ஏற்பதாகவும், அதனை சரி செய்து தருவதாகவும் நம்பிக்கை அளிக்கின்றனர். எனவே ஜாக்கி மூலம் கட்டிடங்கள் உயர்த்தப்பட்டால் அவை இடிந்து விடுமோ என பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
* சூரிய ஒளி நிகழ்வு
குறிப்பிட்ட வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி பட்டதாகவும், அதன் பின்பு சில ஆண்டுகளாக சூரிய ஒளி படவில்லை எனவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சிவலிங்கம் சுமார் 5 அடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது உயர்த்தப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று சிவலிங்கம் அமைந்துள்ள பீடத்தின் மீது சூரிய ஒளி பட்டுள்ளது. எனவே தொல்லியல் துறை சார்பில் முழு கோயிலையும் உயர்த்திய பின்பு கண்டிப்பாக மீண்டும் பழையபடி சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் என கோயில் நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.