நேதாஜி நகர் மக்கள் எதிர்ப்பு கம்பியின்றி மழைநீர் கால்வாய்
சென்னை, பெரும்பாக்கம், நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில், நேதாஜி நகர் உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இணைப்பு சாலையில் மூடு கால்வாய் அமைக்கப்பட்டதால், நேதாஜி நகர் பள்ளமாக மாறியது. சாதாரண மழைக்கே குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில், இந்த சாலையில் 300 மீட்டர் நீளம், 1.5 அடி அகலத்தில் வடிகால் கட்ட முடிவானது.
மழை பெய்து வரும் நிலையிலும், கம்பி கட்டாமல், பக்கவாட்டில் கான்கிரீட் கலவை போட்டு, கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
வடிகால் அமைப்பதால், 10 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு வரும் என்று நினைத்தோம். மழையிலும் கால்வாய் பணி செய்கின்றனர். இதனால் எந்த பயனும் கிடைக்காது என்று, அதிகாரிகளிடமும், கவுன்சிலர்களிடமும் கூறிவிட்டோம்; அவர்களும் கண்டுகொள்ளவில்லை.
வடிகால், மூடுகால்வாயில் சேறும் இடத்தில் ‘ஷட்டர்’ அமைக்க வேண்டும். அப்போதுதான், வெள்ளம் பின்னோக்கி பாய்வதை தடுக்க முடியும்.
ஷட்டரை மூடி, அதிக திறன் கொண்ட மோட்டார் வைத்து நீரை இறைத்து, மூடு கால்வாயில் விடும் வகையில், கட்டமைப்பு அமைத்தால் தான், நேதாஜி நகர் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த பகுதி மக்கள் கேட்டதால், கம்பி கட்டாமல் அவசரமாக சிறு கால்வாய் அமைக்கிறோம். கான்கிரீட் கலவையில், குயிக் செப்டிக் கெமிக்கல், லேட் செப்டிக் கெமிக்கல் ஆகியவற்றை சேர்த்துள்ளோம்.
‘இதனால், மழையிலும் கட்டுமானத்தில் பாதிப்பு வராது. ஷட்டர் அமைப்பது குறித்து, மேல் அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றனர்.