புதிய சாலை புழுதிவாக்கத்தில் வடிகால் சீரமைக்காமல் மக்கள் அதிருப்தி
புழுதிவாக்கம், பெருங்குடி மண்டலம், 186வது வார்டுக்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்கு, பாலாஜி நகர் விரிவு – 2ல், 10 ஆண்டிற்கு முன், 250 மீ., நீளத்தில், சாலையோரம் அமைக்கப்பட்ட வடிகால், துார் வாரப்படாமல், சேறும் சகதியுமாக உள்ளது.
இந்த வடிகாலை அகற்றி, புதிய வடிகால் அமைத்து, சாலையை புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், வடிகால் அமைப்பதற்கு முன்பே, அவசரகதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டதால், அப்பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் கோபிநாத், 74, கூறியதாவது:
இந்த சாலை நல்ல நிலையில் தான் இருந்தது. வாகனப் போக்குவரத்தும் தடையின்றி நடந்தது. இந்நிலையில், கடந்த வாரம் இரவோடு இரவாக, அவசரமாக புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
பழைய வடிகாலை அகற்றி, புதிய வடிகால் பணி துவங்கும்போது, தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய சாலை சேதமாக்கப்படும். தவிர, புழுதிவாக்கத்தின் பல இடங்களில் குண்டும் குழியுமாக, வாகனப் போக்குவரத்திற்கு லாயக்கற்று, பல சாலைகள் உள்ளன.
அந்த சாலைகளை புனரமைக்காமல், நன்றாக இருந்த சாலை மீது, 12 செ.மீ., உயரத்திற்கு புதிய சாலை அமைத்திருப்பதால், அருகில் உள்ள தெருக்கள் மற்றும் பூங்காவில் மழைநீர் தஞ்சமடைகிறது. வடிகால் அமைக்காமல் சாலை அமைத்தது, மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.