பணிப்பெண் கணவர் கைது அதிகாரி வீட்டில் திருட்டு
அண்ணா நகர், ஷெனாய் நகர், கிரசண்ட் சாலையைச் சேர்ந்தவர் நீரஜா, 31; பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார்.
சில மாதங்களுக்கு முன், வீட்டில் உள்ள நகைகளை கணக்கிட்டபோது, 30 சவரன், வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது.
இத்திருட்டில் ஈடுபட்டதாக, இவரது வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த, சேத்துப்பட்டு, மனோகரன் தெருவைச் சேர்ந்த லட்சுமிபவானி, 30, என்பவரை, போலீசார் பிடித்தனர். ஆடம்பர வாழ்க்கைக்காக சிறுக, சிறுக நகைகளை திருடியதை, லட்சுமிபவானி ஒப்புக்கொண்டார்.
தவிர, திருடிய நகைகளை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் நகை கடன் நிறுவனத்தில் அடகு வைத்து, கார் உள்ளிட்டவற்றை தவணையில் வாங்கியதும் தெரிந்தது.
திருட்டுக்கு உடந்தையாக இருந்த பணிபெண்ணின் கணவர் துர்கா பிரசாந்த், 38, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். கடன் நிறுவனத்தில் இருந்த, 17.5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.