ஆலந்துார் மண்டலத்தில் பூங்காக்கள் சீரமைப்பு
ஆலந்துார், புயல், மழையால் ஆலந்துார் மண்டத்தில் சீர்குலைந்த பூங்காக்களில், நேற்று முழு வீச்சுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சமீபத்திய புயல் மழையால், ஆலந்துார் மண்டலத்தில் ஆதம்பாக்கம், நங்கநல்லுார், முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதில், மண்டலம் முழுதும் உள்ள பல பூங்காக்களில் தண்ணீர் புகுந்து சகதியாக மாறி சீர்குலைந்தது.
புயல் கரையை கடந்த நிலையில், வீசிய காற்றில் நங்கநல்லுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மரக்கிளைகள் முறிந்து தொங்கின. இதனால், சில இடங்களில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மண்டலம் முழுதும் சீர்குலைந்த பூங்காக்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணி நடந்தது. மேலும், சாலையோரங்களில் உடைந்து தொங்கிய மரக்கிளைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.