மாட்டை பிடித்த அதிகாரிகளுக்கு மிரட்டல் உரிமையாளர் பெட்ரோல் ஊற்றி ரகளை
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், சாலைகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராதம் செலுத்தாத மாடுகள், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரை அடுத்த கொண்டமங்கலம் ஊராட்சி கோசாலையில் அடைக்கப்படுகின்றன.
நேற்று காலை, கக்கன் சாலையில், இரண்டு மாடுகளை பிடித்த மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர், அவற்றை வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது, அங்கு வந்த தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த கோகுல், 35, என்பவர், தனது மாட்டை பிடித்துவிட்டதாக கூறி, ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். மாநகராட்சி ஊழியர்கள், மாட்டு வாகனத்தை மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
பின்தொடர்ந்து சென்ற கோகுல் மற்றும் அவரது தந்தை ஜானகிராமன் உள்ளிட்ட சிலர், மாநகராட்சி அலுவலக நுழைவாயிலில், சுகாதார அதிகாரிகளுடன் தகராறு செய்தனர்.
பிடிக்கப்பட்ட மாடு, அவரது மாடு இல்லை என்பது தெரிந்தும், தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது, மாடு உரிமையாளரான ஜெயரமானும், அவர்களுடன் சேர்ந்து அதிகாரிகளுடன் ரகளையில் ஈடுபட்டார்.
அப்போது, பெட்ரோல் வாங்கி வந்த கோகுல், உடலில் ஊற்றிக்கொண்டார். அதிர்ச்சியடைந்த சுகாதார அதிகாரிகள், அவர் மீது தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து, அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது என, கோகுல் மற்றும் அவரது தந்தை மீது, தாம்பரம் காவல் நிலையத்தில், சுகாதார அதிகாரிகள் புகார் அளித்தனர். இப்புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், பிடிக்கப்பட்ட இரண்டு மாடுகளும், கொண்டமங்கலம் கோசாலையில் அடைக்கப்பட்டன. இனி வரும் காலங்களில், மாடு பிடிக்க செல்லும் சுகாதார அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.