ஓமந்துாரார் கல்லுாரியில் ‘ராகிங்’ செய்வதாக புகார்
சென்னை, சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில் இளநிலை மருத்துவம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், டில்லியில் உள்ள ‘ராகிங்’ தடுப்பு பிரிவில், நவ., 27ல் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்து இருந்தார்.
புகாரில், சீனியர் மாணவர்களின் ரெக்கார்டு நோட்டுகளை எழுத வைத்தல், வகுப்பறைக்கு செல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட ராகிங் செயல்கள் நடப்பதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ராகிங் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்படியும், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் அறிக்கை தரும்படியும், டில்லியில் உள்ள ராகிங் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் அழகு, கல்லுாரி பேராசிரியர்கள், பெற்றோர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், மருத்துவக் கல்லுாரி டீன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அக்குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளனர்.