மீன் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
சென்னை, மெரினா லுாப் சாலையில், 14.93 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, ஆக., 12ம் தேதி திறந்து வைத்தார். தொடர்ந்து, குலுக்கல் முறையில் மீன் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டன.
ஆனால், சில வியாபாரிகள் முன் வரிசையில் கடை கிடைக்காததால், மீண்டும் லுாப் சாலையிலேயே வியாபாரம் மேற்கொண்டனர். இதனால், மீன் அங்காடியில் வியாபாரம் செய்பவர்களுக்கு இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன், சாலையில் வியாபாரம் செய்தவர்களை அப்புறப்படுத்தி, மீன் அங்காடியில் மட்டுமே வியாபாரம் செய்ய வைத்தனர்.
இருப்பினும், சிலர் அத்துமீறி வாகனம் நிறுத்தும் இடத்தில் வியாபாரம் மேற்கொண்டனர். இதை கண்டித்து முன் வரிசையில் கடைகள் ஒதுக்கப்பட்ட வியாபாரிகள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று இரவு லுாப் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மெரினா போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் லுாப் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லுாப் சாலை முதல் காமராஜர் சாலை ராணி மேரி கல்லுாரி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.