அதிகாரிகளுடன் எம்எல்ஏ நேரில் ஆய்வு : நெமிலிச்சேரி பகுதியில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு
தாம்பரம்: நெமிலிச்சேரி பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்த இ.கருணாநிதி எம்எல்ஏ பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர், பாலாஜி நகர், அன்னை பில்டர்ஸ், காமாட்சி நகர், பம்மல், முத்தமிழ் நகர், நல்லதம்பி சாலை, பொழிச்சலூர், பவானி நகர், வெங்கடேஸ்வரா நகர், பல்லாவரம், திருவள்ளுவர் நகர், ஜிஎஸ்டி சாலை, நாகல்கேணி, குரோம்பேட்டை, ராதா நகர், அஸ்தினாபுரம், திருமலை நகர், ஜெயின் நகர், கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி நேற்று அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார்.
இதனையடுத்து முழுமையாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து திருநீர்மலை பகுதியில் கட் அண்டு கவர் கால்வாயை மேலும் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்ததன் பேரில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு கால்வாயை உயர்த்துவது குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நெமிலிச்சேரி பகுதியில் பெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி மக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த இ.கருணாநிதி எம்எல்ஏ அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடர் தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.