திருவொற்றியூர் , மணலி, மாதவரத்தில் கொட்டும் மழையிலும் மீட்பு பணி: 30 ஆயிரம் பேருக்கு உணவு
திருவொற்றியூர்: பெஞ்சல் புயல் காரணமாக வடசென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்ததால், திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி சார்பில் அனைத்து பகுதிகளிலும் வடிகால் அமைக்கப்பட்டதால், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய நீர் கால்வாய்களில் விரைந்து வடிந்தது.
மேலும், மாநகராட்சி சார்பில் தாழ்வான இடங்களை முன்னதாகவே அடையாளம் கண்டு, அங்கு ராட்சத மோட்டார்கள் மற்றும் டிராக்டர் மூலம் 24 மணி நேரமும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அப்புறப்படுத்தினர். இதனால், பல இடங்களில் மழைநீர் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் கடல் சீற்றமாக காணப்பட்டது. எண்ணூர் தாழங்குப்பம், பெரியகுப்பம் வரை கடலரிப்பு தடுப்பிற்காக போடபட்டிருந்த பாறைகளின் மீது ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக மோதியதால், பாறை துகள்கள் அருகில் உள்ள விரைவு சாலையில் சிதறின.
இதனால் இந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து சாலையில் சிதறி கடந்த கற்களை அப்புறப்படுத்தினர். மேலும் சீற்றம் குறையாததால் எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் கடலோரத்தில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி பைபர் படகுகள் மற்றும் வலைகளை மீனவர்கள் மேடான பகுதிக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்தனர். புயல் கரையை கடந்தாலும் தொடர்ந்து விட்டு விட்டு மழைபெய்து வருவதால் நேற்றும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனிடையே தொடர் காற்று மற்றும் மழை காரணமாக வெளியே வர முடியாமல் வீட்டில் முடங்கிய மக்களுக்கு மாநகராட்சி சார்பில் 3 வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி திருவொற்றியூர், மணலி, மாதவரம் மண்டலங்களில் அந்தந்த மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், நந்தகோபால் ஆகியோர் தலைமையில் உணவு சமைக்கப்பட்டு மண்டல உதவி வருவாய் அலுவலர் மற்றும் ஊழியர்கள், கொட்டு மழையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று, பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினர். அந்த வகையில், திருவொற்றியூரில் 12 ஆயிரம் பேர், மணலியில் 10 ஆயிரம் பேர், மாதாரத்தில் 8 ஆயிரம் பேர் என 3 மண்டலங்களிலும் 30 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.