பள்ளி மாணவியின் வாழ்க்கையை சீரழித்த டியூசன் ஆசிரியை

சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த 29 வயதுடைய டியூசன் ஆசிரியை ஒருவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி டியூசன் படித்து வந்துள்ளார்.

டியூசன் ஆசிரியை வீட்டுக்கு எதிரே அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்த 38 வயதுள்ள நபருடன் டியூசன் ஆசிரியைக்கு பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு தன்னிடம் டியூசன் படித்து வந்த சிறுமியுடன், டியூசன் ஆசிரியை பேட்மிண்டன் விளையாடி கொண்டிருந்தபோது தனது காதலன் வீட்டில் இருக்கிறாரா? என பார்த்து வரும்படி அந்த சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.

அதன்படி அங்கு சென்ற சிறுமியை டியூசன் ஆசிரியையின் காதலன், கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதன்பின்பு, அந்த சிறுமியை அடைய வேண்டும் என்ற நோக்கில் இருந்த அவர், டியூசன் ஆசிரியையின் உதவியை நாடினார்.

ஒருநாள் மட்டும் அந்த சிறுமி தன்னோடு இருப்பதற்கு ஏற்பாடு செய்தால், ‘உன்னை திருமணம் செய்து கொள்வேன்’ என டியூசன் ஆசிரியையிடம் ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

ஏற்கனவே காதலனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருந்த டியூசன் ஆசிரியை அதற்கான திட்டத்தை உருவாக்கினார்.

அதன்படி, சிறுமியின் தாயாரிடம் புராஜக்ட் வேலை இருப்பதால் சிறுமியை பள்ளியில் விட்டு செல்லுமாறு ஆசிரியை கூறி உள்ளார். அதன்படி பள்ளியில் விட்டு சென்ற சிறுமியை டியூசன் ஆசிரியை, தனது காதலனுடன் சேர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்குள்ள விடுதி அறையில் சிறுமியை டியூசன் ஆசிரியையின் காதலன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால், ‘எனது சாவுக்கு நீதான் காரணம் என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன்’ என சிறுமியை ஆசிரியை மிரட்டி உள்ளார்.

மேலும், வீட்டில் இருந்து பணம் மற்றும் நகையை எடுத்து வரும்படியும் இல்லாதபட்சத்தில் தனது காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை உனது பெற்றோருக்கு அனுப்பிவிடுவேன் என்றும் சிறுமியை மிரட்டி ஏராளமான நகை மற்றும் பணத்தை டியூசன் ஆசிரியை அபகரித்து உள்ளார்.

இந்த நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் அடமானமாக வைத்து உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் டியூசன் ஆசிரியை அவரது காதலனோடு அறையில் தங்க வைத்தது, மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்தது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தியாகராயநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ கோர்ட்டு நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, டியூசன் ஆசிரியை, அவரது காதலன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், சிறுமியை மிரட்டி பறித்து அடமானமாக வைக்கப்பட்டுள்ள நகைகளை விடுவிக்கும்படி தனியார் நிதி நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *