138 வருட வரலாற்றில் 2-வது முறையாக தென் கிழக்கு ஆசியாவில் உலக செஸ் சாம்பியன்ஷிப்: சிங்கப்பூரில் நடக்கிறது
சிங்கப்பூர்: இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ், நடப்புஉலக சாம்பியனான 31 வயதான சீனாவின் டிங் லிரென் ஆகியோர் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமையை சிங்கப்பூர் பெற்றுள்ளதாக சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த போட்டியை சென்னையில் நடத்துவதற்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், டெல்லியில் நடத்துவதற்காக அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் விண்ணப்பித்திருந்தன. ஆனால் ஃபிடே சிங்கப்பூரை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது.
இதற்காக சிங்கப்பூரில் 4 நகரங்களை ஃபிடே குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இதில் ஓர் இடத்தை தேர்வு செய்து அங்குபோட்டி நடத்தப்படும். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் ஃபிடே தெரிவித்துள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 138 ஆண்டுகால வரலாற்றில் தென்கிழக்கு ஆசியாவில் இப்போட்டி நடைபெறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 1978-ல் இந்தத் தொடர் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகுயோ நகரில் நடத்தப்பட்டிருந்தது.
தற்போது நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கடந்த முறை பயன்படுத்தப்பட்ட அதே விதிமுறைகளே கடைபிடிக்கப்பட உள்ளன. இதன்படி 14 கிளாசிக் ஆட்டங்கள் நடத்தப்படும். கிளாசிக் போட்டியில் அதிகபட்சம் 7.5 புள்ளிகளை பெறும் வீரர் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ளது.
ஆட்டம் டிராவில் முடிவடைந்தால் 0.5 புள்ளிகளும், வெற்றி பெற்றால் முழுமையாக ஒரு புள்ளியும் வழங்கப்படும். 14 கிளாசிக் ஆட்டங்களின் முடிவில் இருவரும் ஒரே புள்ளிகளை பெற்றிருந்தால் வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கர் சுற்று நடத்தப்படும். இது 4 ரேபிட் சுற்று ஆட்டங்களை கொண்டதாக இருக்கும்.
2023-ம் ஆண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் டிங் லிரென், ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியை எதிர்த்து விளையாடினார். 14கிளாசிக் ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா 7 புள்ளிகளை பெற்றிருந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற டை பிரேக்கரில் டிங் லிரென் 2.5 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அதன்பின்னர் உடல் நிலை காரணமாக பல மாதங்களாக டிங்லிரென் தொழில்முறை செஸ் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை.
2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து டிங் லிரென் விலகியிருந்தார். மேலும் கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் முதல்நான்கு போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனினும் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற டாடா ஸ்டீல்செஸ் போட்டியில் டிங் லிரென் களமிறங்கினார். இதன் மூலம் அவர், உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க விரும்புவதை செஸ் உலகுக்கு அறிவித்தார்.
டிங் லிரெனுடன் மோத உள்ள இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், கடந்த ஏப்ரல் மாதம் டொராண்டோவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதன் வாயிலாகவே டிங் லிரெனுடன் உலக சாம்பியன் பட்டத்துக்கு பலப்பரீட்சை நடத்த உள்ளார் குகேஷ்.