திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்

சென்னை: மக்களவை, மாநிலங்களவை என இரண்டுக்கும் சேர்த்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் 18-வது மக்களவைக்கான பொதுத்தேர்தல் கடந்த ஏப்.19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக கூட்டணி 293 இடங்களைப் பெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது.

இந்நிலையில், திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு உரியவர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.,யும், மக்களவை குழுத் தலைவராக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பியும், மக்களவை குழு துணைத் தலைவராக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பியும், மக்களவை கொறடாவாக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பியும் நியமிக்கப்படுகின்றனர்.

மேலும், மாநிலங்களவை குழுத்தலைவராக கொள்கைபரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்பி.,யும், மாநிலங்களவை குழு துணைத் தலைவராக தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், மாநிலங்களவை கொறடாவாக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், இரு அவைகளின் பொருளாளராக கொள்கைபரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகனும் நியமிக்கப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *