மற்றொரு ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு; ரூ.50,000 கோடியில் 26 ரபேல் விமானங்கள்: பிரான்ஸ் குழு நாளை இந்தியா வருகை

புதுடெல்லி: ரூ.50,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதால், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் குழு நாளை இந்தியா வருகிறது. இந்தியா – பிரான்ஸ் இடையிலான ‘ரபேல்’ போர் விமானம் தொடர்பான மற்றொரு ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான 26 ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் தொடங்க உள்ளன. இதற்காக நாளை (மே 30) பிரான்ஸ் நாட்டின் உயர்மட்ட குழு இந்தியா வரவுள்ளது. அந்த குழுவினர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பிரான்ஸ் குழுவில், விமான தயாரிப்பு நிறுவனங்கள், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தொழில்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.இந்தியா தரப்பில், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்து கொள்கின்றன. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும்பட்சத்தில், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியவற்றிற்கு 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான இந்தியாவின் டெண்டருக்கு, பிரான்ஸ் நாடு கடந்த டிசம்பர் மாதம் தனது அனுமதியை வழங்கியது. இந்த ஒப்பந்தம் இரு நாட்டு அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்பதால், இந்திய மற்றும் பிரான்ஸ் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *