பெண் காவலர்கள் பற்றி அவதூறு…. வழக்கு….கைது… கஞ்சா வழக்கு….பின்னனி என்ன? பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?

ஏழு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் யூ டியூபரான சவுக்கு சங்கர், தற்போது குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை பேட்டியெடுத்த ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். போலீஸ் காவல் நிறைவடைந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சவுக்கு சங்கர் தனது கை உடைந்திருப்பதை காட்டி நீதிபதியிடம் முறையிட்டது என்ன? நீதிபதி என்ன பதிலளித்தார்? இந்த விவகாரத்தில் நடப்பது என்ன?

தேனியில் சவுக்கு சங்கர் கைது

பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது பேட்டிகளை ஒளிபரப்பிய யூ டியூப் சேனலின் எடிட்டரான ஃபெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

‘சவுக்கு’ என்ற இணையதளத்தை நடத்தி வந்ததன் மூலம் அறியப்பட்ட ஏ. சங்கர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார்.

இந்த அவதூறு கருத்துகள் தொடர்பாக மே மாதம் 3ஆம் தேதியன்று காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் கோயம்புத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து சவுக்கு சங்கர் மீது 294 (B), 353, 509, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4, ஐடி சட்டத்தின் பிரிவு 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில், தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சங்கரை மே 4ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோவை நகர சைபர் க்ரைம் காவல்துறை கைது செய்தது.

 
சவுக்கு சங்கர் பின்னணி என்ன?

போதைப்பொருள் வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்கு

தேனியில் சங்கரை கைது செய்ய பழனிச்செட்டிப்பட்டி காவல் துறையினர் வந்த போது, சங்கர் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. அந்தத் தருணத்தில் மேலும் சிலர் அளித்த தகவல்களின் அடிப்படையில் சங்கர் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்ட போது அங்கிருந்து கஞ்சா, பணம் போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு சங்கர், சங்கருடன் தங்கியிருந்த ராம் பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் மீதும் 294(b), 353, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய பிரிவுகள் தவிர போதைப்பொருள் தடுப்பு தொடர்பான சில சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இதற்குப் பிறகு சங்கரும் மற்ற இருவரும் காவல்துறை வாகனத்தில் கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அந்த வாகனம் திருப்பூர் தாராபுரம் அருகே விபத்திற்குள்ளானதில் வாகனத்தில் இருந்த காவலர்கள் உட்பட அனைவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு, நீதிமன்றக் காவலில் சங்கர் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

போதைப்பொருள் தொடர்பான வழக்கில் மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கரை மே 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கஞ்சா வழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு, சென்னை தியாகராய நகரில் இருந்த அலுவலகம் ஆகிய இடங்களில் காவல்துறை சோதனை நடத்தியது.

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்த நிலையில், மே ஆறாம் தேதியன்று செய்தியாளர்களைச் சந்தித்த சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் எஸ். கோபாலகிருஷ்ணன், கோயம்புத்தூர் சிறையில் சங்கர் தாக்கப்பட்டதாகவும் அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ததோடு, சங்கர் காயப்படுத்தப்பட்டிருப்பது குறித்து நீதித் துறை விசாரணை நடத்த வேண்டுமென கோரினார். சவுக்கு சங்கரும் இது தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இதற்குப் பிறகு, கோயம்புத்தூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் கோவைச் சிறைக்குச் சென்று இது குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டப் பணிகள் ஆணையத்தின் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி கோவை சிறையில் சட்டப் பணிகள் ஆணையம் அளித்த அறிக்கையில், தனது வலது கையில் வலி இருப்பதாக சங்கர் கூறியதாகவும் அவருக்கு சிகிச்சை தேவைப்படும் என்றும் கூறப்பட்டிருந்ததாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு சங்கர் மேலும் சில வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்காக மே ஆறாம் தேதியன்று சேலத்தைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் அளித்த புகார், மே எட்டாம் தேதியன்று முசிறியைச் சேர்ந்த காவல்துறை டிஎஸ்பி அளித்த புகார் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

தமிழக முன்னேற்றப் படை என்ற கட்சியை நடத்தி வரும் வீரலட்சுமி என்பவர் அளித்த புகாரில் மே எட்டாம் தேதி சங்கர் மீதும் சங்கரைப் பேட்டியெடுத்த யூ டியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு, 2018ஆம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர் ஒருவர், சவுக்கு சங்கர் தன்னைப் பற்றி அவதூறாக எழுதிவருவதாக அளித்த புகாரில் முதல் தகவல் அறிக்கை அதே நாளில் பதிவுசெய்யப்பட்டது.

மே பத்தாம் தேதியன்று, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் புகார் ஒன்றை அளித்தது. அந்தப் புகாரில் போலி ஆவணங்களை வைத்துக்கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து தவறான கருத்துகளை சங்கர் பரப்பிவருவதாக கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாகவும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

சவுக்கு சங்கர் மீது ஏழு வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், அவரைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருக்கிறார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை, கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு மே 12ஆம் தேதி அளிக்கப்பட்டது.

சவுக்கு சங்கர் பின்னணி என்ன?

டெல்லியில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். சங்கர் தொடர்பான வழக்கில் தான் கைதுசெய்யப்படக்கூடும் என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், யூ டியூப்களில் பேட்டி எடுப்பவர்கள், பேட்டி அளிப்பவர்களைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றனர். ஆகவே அவர்களைத்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று கூறி, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தது.

இதையடுத்து, ஃபெலிக்ஸ் ஜெரால்டைக் கைது செய்யும் முயற்சிகளில் காவல்துறை இறங்கியது. ஃபெலிக்ஸ் ஜெரால்டு, டெல்லி சென்றிருந்த நிலையில், அவரை அங்கு வைத்து திருச்சி மாவட்ட தனிப்படைக் காவல்துறையினர் மே10ம் தேதி இரவில் கைதுசெய்தனர்.

சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கூறுவது என்ன?

இதற்கிடையில் கைக்கு சிகிச்சை பெறுவதற்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கிருந்த ஊடகங்களைப் பார்த்து, “கோயம்புத்தூர் சிறையின் கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் தனது கையை உடைத்ததாகவும் தான் சிறையிலேயே கொல்லப்படலாம்” என்றும் சத்தமிட்டார்.

சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்குகள் மிக ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அவரது பாதுகாப்பு குறித்து மட்டுமே கவலைப்படுவதாகச் சொல்கிறார் அவரது வழக்கறிஞரான கோபாலகிருஷ்ணன்.

“எல்லா வழக்குகளும் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றன. அதனால் அதைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. கையில் அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது, மூன்று இடங்களில் எலும்பு முறிவு இருந்தது தெரியவந்தது. அதற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாவுக்கட்டு போடப்பட்டது. இன்று மாவுக்கட்டு மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது போலீஸ் காவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு அவருடைய பாதுகாப்பை மட்டும் உறுதிப்படுத்த விரும்புகிறோம். வழக்கை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என இருக்கிறோம்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

சவுக்கு சங்கர் பின்னணி என்ன?

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

சவுக்கு சங்கரை போலீஸ் தனது காவலில் எடுத்து ஒருநாள் விசாரிக்க நீதிமன்றம் நேற்று அனுமதித்தது. அதன்படி, திங்கட்கிழமை மாலை 3 மணி முதல் செவ்வாய் கிழமை மாலை 5 மணி வரை அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். காவல் வழங்கப்பட்டிருக்கிறது.

நீதிமன்றம் அளித்த ஒருநாள் போலீஸ் காவல் நிறைவடைந்ததால் இன்று மே 14ம் தேதி கோவை குற்றவியல் நீதிமன்ற நடுவர் சரவணபாபு முன்னிலையில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் ஆஜர் படுத்தினர்.

சவுக்கு சங்கர் முறையீடும், நீதிபதி அறிவுறுத்தலும்

நீதிமன்ற விசாரணையின் போது சவுக்கு சங்கர், “கோவை மத்திய சிறையில் என்னை தனிமை சிறையில் அடைத்துள்ளார்கள், அதிலிருந்து சாதாரண சிறைக்கு மாற்ற வேண்டும். கை உடைந்துள்ளதால் உதவிக்கு கூட யாரும் இல்லை,” என்று நீதிபதியிடம் முறையிட்டார். அதற்கு பதிலளித்த நீதிபதி சரவணபாபு, அதற்கென தனியாக மனு அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

பின்னர், சவுக்கு சங்கரை வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். இதையடுத்து, சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

சவுக்கு சங்கரின் பின்னணி என்ன?

சவுக்கு சங்கர், தமிழ்நாடு அரசின் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றியவர். 2008ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் எஸ். கே. உபாத்தியாய்க்கும் தலைமைச் செயலாளர் எல். கே. திரிபாதிக்கும் இடையே நிகழ்ந்த தொலைப்பேசி உரையாடலின் குரல் பதிவை கசியவிட்டதாக இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதற்குப் பிறகு சவுக்கு என்ற பெயரில் வலைபதிவு பக்கம் ஒன்றைத் துவங்கி, அதில் எழுத ஆரம்பித்தார். 2010ஆம் ஆண்டில் அவர் எழுதிய பதிவு ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு சவுக்கு என்ற பெயரில் இணைய தளம் ஒன்றைத் துவங்கி, அதில் தனது கட்டுரைகளை வெளியிட்டுவந்தார்.

இந்நிலையில், அந்த இணைய தளத்தில் எழுதப்பட்ட கட்டுரை தொடர்பாக கிரிமினல் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு நடத்திவந்த இணையதளத்தை முடக்க உத்தரவிட்டது.

இதற்குப் பிறகு தனது சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து எழுதி வந்த சவுக்கு சங்கர், யூ டியூப் சேனல்களிலும் பேட்டிகளை அளித்துவந்தார்.

இதற்குப் பிறகு, 2022 செப்டம்பரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதற்குச் சில மாதங்களுக்குப் பின், சவுக்கு மீடியா (ஓபிசி) பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் சார்பில் இணையதளம் ஒன்றும் யூடியூப் சேனல் ஒன்றும் நடத்தப்பட்டுவருகிறது.

இந்த நிலையில்தான், வேறு ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார்.

தவறான முன்னுதாரணம் என்று அதிமுக கருத்து

சவுக்கு சங்கர் நீண்ட காலமாகவே தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்துவந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. “சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பதை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகி விடும்” என இந்தக் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி.

“சவுக்கு சங்கர் தனிப்பட்ட முறையில் காவல்துறையினர் குறித்து பேசியது தவறு. எந்த ஒரு அதிகாரியையோ, பொத்தாம்பொதுவாக காவல்துறையையோ தனிப்பட்ட முறையில் மோசமாகப் பேசுவது ஏற்க முடியாதது. ஆனால், கைது செய்யப்பட்ட பிறகு அவர் சிறையில் தாக்கப்பட்டது, ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் இப்போது முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்வது, குண்டர் சட்டத்தில் கைது செய்வதெல்லாம் உள்நோக்கம் உடையது.

அவர் தொடர்ந்து ஆளுங்கட்சியை விமர்சித்து வந்தார். இப்போது அவரைக் கைது செய்யும் வாய்ப்புக் கிடைத்தவுடன், அவரை முழுமையாக முடக்குவதற்காக இதைச் செய்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும்வரை அவரை முடக்கி வைக்க நினைக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதைப் போல காட்டிக்கொள்கிறார்கள்” என்கிறார் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார்.

திமுக கூறுவது என்ன?

ஆனால், இந்தக் கைது நடவடிக்கைக்கும் தி.மு.கவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன்.

“சவுக்கு இப்போதுதானா தி.மு.கவை விமர்சித்துப் பேசுகிறார். தி.மு.க. என்றைக்கு ஆட்சியில் அமர்ந்ததோ, அப்போதிலிருந்து படுமோசமாக, தரமற்றவகையில் விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், தி.மு.க. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது காவல் துறையில் உள்ள பெண் அதிகாரிகளைப் பற்றி தரக்குறைவாகப் பேசியதற்காக கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருடைய பேச்சுகள் வெறுப்புப் பேச்சுக்கு ஒப்பானவை. கைதுசெய்யக்கூடிய வகையிலேயே அவர் பேசியிருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுகிறார். ஆகவே கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருடைய கைதை நீதிமன்றமும் ஒப்புக்கொண்டிருக்கிறது

ஆனால், இது தி.மு.கவுக்கு சம்பந்தமில்லாத வழக்கு. சவுக்கு சங்கர் போன்றவர்களை தி.மு.க. ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை” என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

“கருத்து சுதந்திரத்தின் எல்லையை காவல்துறை நிர்ணயிப்பதா?”

கருத்து சுதந்திரத்தின் எல்லையை காவல்துறை நிர்ணயிப்பதாக குற்றம்சாட்டுகிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

“இங்கே கருத்து சுதந்திரத்தின் எல்லையை தமிழ்நாடு காவல்துறைதான் நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு மோசடிக்கும் ஒரு சட்டம் இருக்கிறது. அவதூறாகப் பேசினால் சிவில் அவதூறு வழக்குகளோ, கிரிமினல் அவதூறு வழக்குகளோ தொடரலாம். இதற்காகவெல்லாம் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது” என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

ஓய்வுபெற்ற டிஜிபி திலகவதி கருத்து

ஆனால், இது மிகச் சரியான நடவடிக்கை என்கிறார் ஓய்வுபெற்ற டிஜிபியான ஜி. திலகவதி. “ஒருவர் காவல் துறையில் இருக்கும் அனைத்து பெண்களின் கண்ணியத்தையும் கெடுக்கும் வகையில் பேசும்போது வேறு எப்படிச் செயல்படுவது? காவல் துறையில் வேலைக்கு வரும் பெண்கள் பல தடைகளைத் தாண்டி வேலைக்கு வருகிறார்கள். இது ஒரு வழக்கமான பணியில்லை. கணவனுக்குப் பதில் சொல்லிவிட்டு, மாமியாருக்கு பதில் சொல்லிவிட்டு பணிக்கு வர வேண்டும்.

காவல் துறை பணியும் மிகக் கடுமையானது. அப்படியிருக்கும்போது இவர் எல்லோரையும் பொத்தாம்பொதுவாக பாலியல் ரீதியாக குற்றம்சாட்டுகிறார். டிஎஸ்பி பணிக்கு வருபவர்கள், ‘க்ரூப் 1’ தேர்ச்சி பெற்று பணிக்கு வருகிறார்கள். அவர்களைப் பற்றி மோசமாகப் பேசுகிறார். இதுபோல பேசும் நபர்களை வேறு என்ன செய்வது? யு டியூபில் வேறு சிலரும் இதுபோல பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்” என்கிறார் ஓய்வுபெற்ற டிஜிபியான திலகவதி.

  • சவுக்கு சங்கர் பின்னணி என்ன?

“சவுக்கு சங்கரை எந்த காலத்திலும் ஆதரிக்க முடியாது”

சவுக்கு சங்கரை எந்தக் காலத்திலும் ஆதரிக்க முடியாது என்றாலும், அரசு வழக்குகள் மூலமே அதனை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.

“சவுக்கு சங்கரைப் பொருத்தவரை அவர் யாருடைய குரலாகவும் ஒலிக்கத் தயங்காதவர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை அவர் ஆதரிக்கும் வகையில் பேசினார். கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி செல்லும் பெண் இறந்துபோனதை கொச்சைப்படுத்திப் பேசினார். அவர் மற்றவர்களைப் பற்றிப் தொனியே மிக மோசமாகவும் மிகுந்த அகங்காரத்துடனும் ஒலிக்கும்.

ஒருவரைப் பற்றி அவதூறாகப் பேசும் போது அதில் முறைப்படி வழக்குப் பதிவுசெய்து, தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அரசு என்பது மிக வலிமையானது. தனி மனிதர்கள் சிறியவர்கள். அவர்களை எதிர்கொள்ளும்போது அரசு அதற்கேற்ற வகையில் செயல்படவேண்டும். ஆனால், அவரை எந்தக் காலத்திலும் ஆதரிக்க முடியாது என்பதில் சந்தேகமில்லை” என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.

message from BBC thanks BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *