38 வயது பெண்ணுக்கு நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் மூளை கட்டிகள் அகற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 38). இவருக்கு சினைப்பையில் புற்றுநோய் இருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர். அவருக்கு புற்றுநோயை குணப்படுத்தும் வகையில் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சையின் போது மூளையில் 1 செ.மீட்டருக்கும் குறைவான அளவில் 2 கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இந்த கட்டிகளின் விளைவாக அவருக்கு தலைவலி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சினைகள் கடந்த ஒரு மாதமாக இருந்து வந்தது. அவரது உடல்நிலை, அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டிகளை அகற்றப்படுவதை தாங்கும் சக்தி இல்லாததால் அவருக்கு எஸ்.ஆர்.எஸ் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவால் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி ‘டீன்’ டாக்டர் சாந்திமலர், மற்றும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் மணி ஆகியோரின் அறிவுரைப்படி கதிர்வீச்சு சிகிச்சை டாக்டர்கள் மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் அதிநவீன மென்பொருள் மூலம் மிக துல்லியமாக புற்றுநோய் பரவிய மூளைத்திசுக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படாத வகையில் மிக துல்லியமாக கதிர்வீச்சு சிகிச்சை செய்து மூளையில் உள்ள 2 கட்டிகளையும் அகற்றினர்.
சிகிச்சையின் போது மூளைக்கு பக்கவிளைவுகள் வராதபடி ‘ஸ்டிராய்டு’ சிகிச்சையும் கதிர்வீச்சின் போது கொடுக்கப்பட்டது. இந்த கதிர்வீச்சு அறுவை சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொண்டால் ரூ.4 லட்சம் வரை செலவாகும். இங்கு இந்த சிகிச்சை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அந்த பெண்ணுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது. தற்போது அந்த பெண் தலைவலி குறைந்து நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.