கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

சென்னை மணலியில் உள்ள மத்திய அரசின் சி.பி.சி.எல். பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாவதாக கல்லூரி படிப்பை முடித்த 1994-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள், தற்போது சென்னை மற்றும் வெளிநாடுகள் என பல இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் வலைதளங்கள் மூலமாக ஒவ்வொருவராக மீண்டும் நட்பை வளர்த்து கொண்டனர். இந்தநிலையில் 25 ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர்கள் அனைவரும் அதே பாலிடெக்னிக் கல்லூரியில் ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக மலேசியா மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்த முன்னாள் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்து வர முடியாத பலர் வலைதளங்கள் வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது தங்களது குடும்பம் மற்றும் பாலிடெக்னிக் படிக்கும்போது நிகழ்ந்த பழைய சம்பவங்களை அனைவரும் நினைவு கூர்ந்தனர். பின்னர் முன்னாள் மாணவர்களின் நினைவாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். தங்களுக்கு கல்வி கற்பித்த கல்லூரி பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *